நீட் தேர்வு தேவையில்லை என்பதுதான் அரசின் கொள்கை முடிவு:
நீட் தேர்வு தேவையில்லை என்பதுதான் மாநில அரசின் கொள்கை முடிவு என்று பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா, ஈரோடு - பெருந்துறை சாலையில் உள்ள ஏ.ஈ.டி. பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவின் முதல் நிகழ்வாக எம்ஜிஆர் புகைப்படக் கண்காட்சி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தனித்திறன் போட்டிகள் தொடக்க விழா நடைபெற்றது. போட்டிகளைத் தொடங்கி வைத்த பின்னர் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்துக்கு நீட் தேர்வு தேவையில்லை என்பதுதான் அரசின் கொள்கை முடிவாகும். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற தொடர்ந்து அரசு முயற்சி எடுத்து வருகிறது. ஆனாலும், எதிர்காலத்தில் எத்தனை போட்டித் தேர்வுகள் வந்தாலும் அதை மாணவர்கள் எளிதில் எதிர்கொள்ளும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
போட்டித் தேர்வுகளுக்காக மாணவர்கள் பயிற்சி பெற வசதியாக, மாநிலம் முழுவதும் 412 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இது தவிர, காணொலிக் காட்சி (விடியோ கான்பிரன்ஸிங்) மூலமாக தலைசிறந்த கல்வியாளர்களைக் கொண்டு, மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை பயிற்சிகள், போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வது உள்ளிட்டவை குறித்து பயிற்சி வழங்கப்படும். இந்த மையங்கள் அனைத்தும் இந்த மாத இறுதிக்குள் தொடங்கப்படும்.
தமிழக அரசு ஊழியர்களின் போராட்டம் தொடர்பாக ஜாக்டோ-ஜியோ அமைப்பு நிர்வாகிகளுடன் ஏற்கெனவே பேச்சுவார்த்தை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதில், ஓரிரு சங்கங்களைத் தவிர மற்ற சங்கத்தினருடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. ஈரோட்டில் பேச்சுவார்த்தை எதுவும் புதன்கிழமை நடைபெறவில்லை என்றார். விழாவில் பங்கேற்ற மக்களவை துணைத் தலைவர் மு. தம்பிதுரை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மாநிலப் பட்டியலில் கல்வி இடம்பெற வேண்டும் என்பதே தமிழக அரசின் கொள்கையாகும். குஜராத், கர்நாடகம், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள் தங்களுக்கு நீட் தேர்வு தேவையில்லை என்று மத்திய அரசிடம் தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக, சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சட்ட மசோதாவை மத்திய அரசு இன்னும் நிராகரிக்கவில்லை. மாணவர்களின் உணர்வுகளை இந்த அரசு புரிந்து கொண்டுள்ளது. எனவே, மாணவர்களின் போராட்டம் தேவையற்றது என்றார்.
இந்நிகழ்ச்சியில், இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், செய்தி-விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, செய்தி- மக்கள்தொடர்பு இயக்குநர் பொ.சங்கர், ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக செயலரும், சட்டப் பேரவை உறுப்பினருமான கே.வி.இராமலிங்கம், மொடக்குறிச்சி சட்டப் பேரவை உறுப்பினர் வே.பொ.சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.