பொறியியல் படிக்க இடம் கிடைத்தும் பரிதவிக்கும் மாணவி
திருச்சி அண்ணா பல்கலையில், பொறியியல் படிப்பில் சேர இடம் கிடைத்தும், பணமின்றி, ஏழை மாணவி தவித்து வருகிறார்.
சேலம் மாவட்டம், ஆத்துாரைச் சேர்ந்தவர் சீனிவாசன், 52; கூலித்தொழிலாளி. இவரது மகள் பிரியதர்ஷினி, 17, பிளஸ் 2 பொதுத்தேர்வில், 1,108 மதிப்பெண், பொறியியல், 'கட் - ஆப்' 196.25 பெற்றார். கவுன்சிலிங்கில், திருச்சி அண்ணா பல்கலையில், பி.டெக்., - பயோ டெக்னாலஜி படிப்பில் சேர வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், போதிய வசதியில்லாததால், கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் திணறி வருகிறார்.
மாணவியின் தந்தை சீனிவாசன் கூறியதாவது: கூலி வேலைக்கு சென்று வருகிறேன். மூன்று குழந்தைகளையும், அரசுப் பள்ளியில் படிக்க வைத்துள்ளேன். இரண்டாவது மகள் பிரியதர்ஷினிக்கு, திருச்சி அண்ணா பல்கலையில், இன்ஜினியரிங் படிக்க இடம் கிடைத்துள்ளது.
ஒரு பருவத்துக்கு, 10 ஆயிரம் ரூபாய், விடுதிக்கு, 13 ஆயிரம் ரூபாய், உணவுக்கு மாதம், 2,000 ரூபாய் உட்பட, ஆண்டுக்கு, 55 ஆயிரம் ரூபாய் செலவாகும். நான்கு ஆண்டுகள் படிக்க வைக்க, பொருளாதார வசதி இல்லை. பணம் இல்லாததால், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியை கேட்டு வருகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
உதவ விரும்புவோர், 94425 11108.