ஜாக்டோ ஜியோ அமைப்பினர் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும் - முதல்-அமைச்சர் பழனிச்சாமி கோரிக்கை
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவர வேண்டும். தமிழகத்தில் 8-வது ஊதியக்குழுவை அமல்படுத்த வேண்டும். அதுவரை இடைக்கால நிவாரணமாக 20 சதவீதம் வழங்க வேண்டும், தொகுப்பூதிய, மதிப்பூதிய முறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
பேச்சுவார்த்தைக்கு அரசு அழைக்காவிட்டால் செப்டம்பர் 7-ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக ஜாக்டோ-ஜியோ அறிவித்திருந்தது. வேலைநிறுத்தம் அறிவித்திருந்த அரசு ஊழியர் - ஆசிரியர் சங்கங்களுடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து செப்டம்பர் 6-ம் தேதிக்குள் அரசிடமிருந்து சாதகமான பதில் வராவிட்டால், செப்.7 முதல் திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் என ஜாக்டோ-ஜியோ அறிவித்து உள்ளது.
இதனையடுத்து ஜாக்டோ ஜியோ அமைப்பினர் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும் என முதல்-அமைச்சர் பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்து உள்ளார். வேலை நிறுத்தத்தை கைவிட்டு மக்கள் பணியை தொடர்ந்து ஆற்ற வேண்டும். கோரிக்கைகள் தொடர்பாக மாநில அரசு கனிவோடு பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். ஊதிய விகிதத்தை திருத்தி அமைப்பது தொடர்பாக ஊதியக்குழு பரிசீலித்து அறிக்கையை தாக்கல் செய்யும், அதன்படி உரிய முடிவு எடுக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.