ஓராண்டிற்குப் பிறகு தமிழகத்தின் முழுநேர கவர்னராக கல்ராஜ் மிஸ்ரா நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக கவர்னராக இருந்த ரோசைய்யா பதவிக் காலம் கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி முடிந்தது. அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படும் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் பதவி நீட்டிப்பு கிடைக்காததால் அவர் ஓய்வு பெற்றார்.
இதைத் தொடர்ந்து தமிழக கவர்னர் பொறுப்பு, மராட்டிய மாநில கவர்னர் வித்யாசாகர் ராவிடம் ஒப் படைக்கப்பட்டது. அவர் சென்னை வந்து கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ந்தேதி தற்காலிக கவர்னராக பதவி ஏற்றார்.
ஆளுநரான வித்யாசகர் ராவ் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதுவரை தமிழகத்திற்கு நிரந்தர ஆளுநர் நியமிக்கப்படவில்லை.
இந்த நிலையில் தமிழகத்தின் முழு நேர கவர்னராக கல்ராஜ் மிஸ்ரா நியமனம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக டெல்லி வட்டாரத்தில் பேசப்படுகிறது. பாராளுமன்ற மேல் சபை எம்.பி.யான அவர் பிரதமர் மோடி தலைமையிலான மந்திரிசபையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் மந்திரியாக இருந்தார்.
பிரதமர் மோடி நேற்று மத்திய மந்திரிசபையை மாற்றியபோது இவர் தமது பதவியை ராஜினாமா செய்தார். 73 வயதாகி விட்டதால் முதுமையை கருத்தில் கொண்டு அவருக்கு மந்திரி பதவியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அவர் ஏதாவது ஒரு மாநிலத்தில் கவர்னராக நியமனம் செய்யப்படுவார் என்று ஏற்கனவே பேசப்பட்டது. இந்த நிலையில் அவர் தமிழகத்துக்கு வரக்கூடும் என்று தெரிகிறது.
உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கல்ராஜ் மிஸ்ரா காஜிப்பூர் மாவட்டத்தில் பிராமண குடும்பத்தில் பிறந்தவர். ஆர்.எஸ்.எஸ்.சில் இருந்து பா.ஜ.க. வுக்கு வந்த இவர் உத்தரபிரதேசத்தில் அமைச்சராகவும் பணிபுரிந்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் உருவானதில் இவர் முக்கிய பங்கு வகித்தார். வயதானாலும் சிறப்பாக பணியாற்றுவதால் இவருக்கு கவர்னர் பொறுப்பை வழங்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்.
பிரதமர் நரேந்தர மோடி தனது சீனா மற்றும் மியான்மர் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியதும் முழுநேர கவர்னர் இல்லாத அனைத்து மாநிலங்களுக்கும் கவர்னர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.