2050-ல் சென்னை நகர் கடலில் மூழ்கும் அபாயம் 10 லட்சம் பேர் வாழ்விடத்தை இழப்பார்கள்
தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறையின் கீழ் பருவநிலை மாற்றம் தமிழக செயல்திட்டம் என்ற அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பின் ஒரு பிரிவாக உள்ள தமிழ்நாடு மாநில நிலம் பயன்படுத்துதல் ஆராய்ச்சி வாரியம் தமிழக இயற்கை சூழ்நிலைகள் குறித்து ஆய்வு நடத்தி உள்ளது.
பருவநிலை மற்றும் உலக வெப்பமயமாதல் காரணமாக தமிழ்நாட்டில் ஏற்படும் விளைவுகள் குறித்து நடத்திய ஆய்வில் உலக வெப்பமயமாதலால் தமிழ்நாட்டில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று தெரியவந்துள்ளது.
உலக வெப்பமயம் அதிகரிப்பின் காரணமாக அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகள் அதிக அளவில் உருகி வருகின்றன. மேற்கு அண்டார்டிகா பகுதியில் கடலுக்கு அடியிலும், அதன் மேல் பகுதியிலும் பெரிய அளவில் பனிப்பாறைகள் இருக்கின்றன. அவை கொஞ்சம் கொஞ்சமாக உருகி வருகிறது.
இதன் காரணமாக 2050-ல் கடல் மட்டம் 4.8 மீட்டர் அளவிற்கு உயரும் என்று தெரியவந்துள்ளது. அதேபோல கிழக்கு அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகள் மிக வேகமாக உருகி வருகின்றன. இதனால் கடல் நீர்மட்டம் 3.4 மீட்டர் உயரம் என்று கண்டுபிடித்துள்ளனர்.
இதன் காரணமாக உலகம் முழுவதுமே கடல் நீர்மட்டம் உயர்ந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். இதனால் தமிழ்நாட்டில் என்ன பாதிப்பு ஏற்படும் என்று ஆய்வு செய்ததில் 2050-ம் ஆண்டில் தமிழ்நாட்டு கடலோர பகுதியில் 4.35 மீட்டரில் இருந்து 6.85 மீட்டர் வரை நீர்மட்டம் உயரும் என்று தெரியவந்துள்ளது.
இதனால் சுமார் 1963 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பு பகுதிகளை கடல் விழுங்கி விடும். சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் 144 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பு கடற்பகுதிக்குள் சென்றுவிடும். இதனால் இந்த பகுதியில் வாழும் 10 லட்சம் மக்கள் வாழ்விடத்தை இழந்து வெளியேற வேண்டிய கட்டாய நிலை ஏற்படும். அதோடு காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் 5 லட்சம் பேர் வெளியேறும் நிலை உருவாகும்.
தமிழ்நாட்டில் உள்நாட்டு உற்பத்தி விகிதம் கடந்த ஆண்டு கணக்கீட்டின் படி ரூ.12 லட்சத்து 12 ஆயிரம் கோடி ஆகும். நிலப்பரப்பை கடல் விழுங்குவதால் இதில் 50-ல் இருந்து 55 சதவீதம் வரை பாதிப்பு ஏற்படும் என்றும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் கடல் மட்டம் உயருவதால் கடல் அரிப்பு இனி அதிகமாகும். இதனால் கடற்கரை பகுதி கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டுவரும். மேலும், கடல் அலையின் சீற்றமும் அதிகரிக்கும். ராட்சத அலைகள் ஊருக்குள் புகும். சூறாவளி, புயல் காலத்தில் இதன் பாதிப்புகள் மோசமாக இருக்கும். கடல்நீர் நிலத்தடி நீருக்குள் புகுந்து உப்பத்தண்ணீராக மாறும். இதுபோல இன்னும் பல பாதிப்புகள் ஏற்படும் என்று அந்த ஆய்வு கூறுகிறது.