எம்.பி.பிஎஸ்., அல்லது பி.டி.எஸ். தவிர மருத்துவ துறையில் பிற படிப்புகள் ஏராளம்!
பிளஸ் 2வில், அறிவியல் பாடத்தை முதன்மைப் பாடமாக எடுத்து படிக்கும் பெரும்பாலான மாணவர்களின் கனவு எம்.பி.பிஎஸ்., அல்லது பி.டி.எஸ்.,! மருத்துவத் துறையில் இந்த படிப்புகளையும் கடந்து, வாய்ப்புகள் மிகுந்த பல்வேறு பட்டப்படிப்புகள் உள்ளன. அவற்றை இங்கே காண்போம்...
மெடிக்கல் ரேடியாலஜி டெக்னாலஜி
கதிரியக்க தொழில்நுட்பத்தை பற்றி படிக்கும் சிறந்த படிப்பு. மனித உடல் உறுப்புகளின் அமைப்புகள் மற்றும் அதன் செயல்நிலை எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து கொள்ள, இந்த படிப்பு உதவுகிறது. இதில், தேர்ச்சி பெற்றவர்கள் ‘ரேடியாலஜிஸ்ட்’ என்று அழைக்கப்படுவர்.
கதிர்வீச்சினை (எக்ஸ்ரே) மனித உடம்புக்குள் செலுத்தி, குறிப்பிட்ட உறுப்புக்களை துல்லியமாக்க படம் எடுத்து, நோய்களை கண்டறிவதும் மற்றும் காயங்கள் அல்லது எலும்பு முறிவுகளை அளவிடுவதும் இவர்கள் தான். ரேடியாலஜி படிப்பில், எக்ஸ்ரே, சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ. தொழில்நுட்பம் போன்றவற்றை பயன்படுத்தும் மற்றும் பரிசோதனை செய்யும் முறைகள் பற்றி விரிவாகப் படிக்கலாம்.
ஆப்தொமெட்ரி
கண்களின் அமைப்பு மற்றும் அதன் செயல்பாடுகளை பற்றி படிக்கும் முதன்மை படிப்பு ஆப்தொமெட்ரி. பார்வை குறைபாடு தொடர்பான பரிசோதனை, கண் நோய்களை கண்டறிதல், கண் சிகிச்சை உள்ளிட்டவற்றை இப்படிப்பின் மூலம் கற்றுக்கொள்ளலாம்.
பார்வை தொடர்பாக ஏற்படும் பிரச்சினைகளை விலக்கி, கிட்டப் பார்வை அல்லது தூரப் பார்வை உடையவர்கள் என்ன மாதிரியான கண்ணாடிகளை அணிய வேண்டும் என்பது உட்பட கண் தொடர்பான கோளாறுகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதற்கு முன் அனைத்துப் பரிசோதனைகளையும் செய்து, அதற்கேற்ற சிகிச்சை குறிப்புகளை வழங்குபவர்கள், ‘ஆப்தொமெட்ரிஸ்ட்’.
நான்கு ஆண்டுகள் கொண்ட இளநிலை பட்டப்படிப்புடன், கிளினிக்கல் அனுபவம் பெற இன்டர்ன்ஷிப் பயிற்சியை மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும். மருத்துவமனைகளில் கண் மருத்துவர்களுக்கு உதவியாளர்களாக இவர்களால் செயல்பட முடியும்.
மெடிக்கல் லேபாரட்டரி டெக்னாலஜி
மருத்துவ ஆய்வுக்கூட பரிசோதனைகள் மூலம் நோய்களை கண்டறிதல், நோயினை பகுத்து ஆராய்தல், மருத்துவரின் ஆலோசனைக்கு ஏற்ப ஆய்வுக்கூடத்தில் அனைத்துப் பணிகளையும் ஒருங்கே செய்து கொடுப்பதை பற்றி படிக்கும் படிப்பு.
உடலில் உள்ள நீர், ரத்தத்தின் அளவு, சதை, கெமிக்கல் அனாலிஸ், உடலில் உள்ள செல்களின் எண்ணிக்கையை கண்டறியும் முறைகள் பற்றி முழுமையாக இந்த படிப்பின் மூலம் மாணவர்கள் கற்றுக் கொள்ளலாம். ஹெமாட்டாலஜி, இம்யூனலாஜி, கிலினிக்கல் பெதாலஜி, பிலெட் பேங் டெக்னாலஜி, மாலிக்குலர் பெதாலஜி, பயோ கெமிஸ்டரி, மைக்ரோபயாலஜி மற்றும் சிரோலஜி உள்ளிட்ட பிரிவுகளில் பணியாற்ற முடியும்.
ஆக்குபேஷனல் தெரபி
இயல்பு நிலையிலிருந்து மாறுபட்ட மனிதர்களின் செயல்பாடுகளுக்கான காரணங்களைக் கண்டறிந்து, அதற்கேற்ப சிகிச்சை அளிப்பது ‘ஆக்குபேஷனல் தெரபி’. மனநலம் சார்ந்த இந்தப் படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு பாலிகிளினிக், மருத்துவமனைகள், மாற்றுத் திறனாளிப் பள்ளிகள், மனநல சிகிச்சை மையங்கள், கல்லூரிகள் போன்றவற்றில் வேலை வாய்ப்புகள் உள்ளன. இயந்திரங்களாக மாறிக்கொண்டிருக்கும் இன்றைய மனித சமுதாயத்துக்கு ‘ஆக்குபேஷனல் தெரபி’ படித்தவர்களின் சேவை அதிகம் தேவைப்படுவதால், இத்துறையில் வாய்ப்புகள் அதிகம். இத்துறையில், பிஎஸ்.சி., எம்எஸ்.சி., மற்றும் டிப்ளமோ படிப்புகள் வழங்கப்படுகின்றன.
பிசியோதெரபி (பி.பீ.டி.,)
துணை மருத்துவப் படிப்புகளில், அதிக முக்கியத்துவம் நிறைந்த படிப்பாக கருதப்படும் படிப்பு இது. முறையாக செயல்படாமல் இருக்கும் உடல் இயக்கத்தை சீர் செய்ய மருந்துகளோடு சேர்த்து பிசியோதெரபி சிகிச்சையும் அவசியமான ஒன்றாகி உள்ளது. எலும்பு முறிவு, சதைப் பிடிப்பு, மூட்டு வலி போன்றவற்றுக்கு சிகிச்சை அளித்து வலியைப் போக்குவதில் பிசியோதெரபிஸ்டுகள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். மருத்துவர்களுக்கு எங்கெல்லாம் வாய்ப்புகள் இருக்கிறதோ, அங்கெல்லாம் ‘பிசியோதெரபிஸ்ட்’களுக்கும் வாய்ப்பு உண்டு. இப்பிரிவில், பிஎஸ்.சி., எம்எஸ்.சி., மற்றும் டிப்ளமோ படிப்புகள் உள்ளன.
நியூரோ டெக்னாலஜி
மருத்துவத் துறையில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் துறை ‘நியூரோ டெக்னாலஜி’! நியூரோ சயின்ஸ், செல்லுலார் இன்ஜினியரிங் மற்றும் சிக்னல் பிராசசிங் உள்ளிட்டவற்றை விரிவாகப் படிப்பதினால், நரம்பியல் மருத்துவர்க்கு இணையாக, இத்துறையில் பட்டப்படிப்பை படித்தவர்கள் செயல்படுகின்றனர். எலக்ட்ரோ டயக்னாஸ்டிக் முறையில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க இத்துறை மிகவும் முக்கியத்துவம் நிறைந்ததாக கருதப்படுகின்றது. இதில், பிஎஸ்.சி., மற்றும் டிப்ளமோ படிப்புகள் உள்ளன.
பெர்பியூஷன் டெக்னாலஜி
அனைத்து விதமான இதய அறுவை சிகிச்சையின் போதும் உடலின் ரத்த ஓட்டம், நின்றுவிடாமல் இருக்கவும், சீராக செயல்படுகின்றதா என்பதை கண்காணிக்கவும், மயக்கவியல் வல்லுநர்களுக்கும் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கும் ‘பெர்பியூஷனிஸ்ட்’ பெரிதும் உதவுகின்றனர். அதனால், ‘பெர்பியூஷனிஸ்ட்’ இல்லாமல் இருதய அறுவை சிகிச்சை என்பது சாத்தியம் இல்லாத ஒன்று. மூன்று ஆண்டுகள் கொண்ட பிஎஸ்.சி.,- பெர்பியூஷன் டெக்னாலஜி படிப்பை படிக்கும் மாணவர்கள், மருத்துவர்களுக்கு நிகராக செயல்பட முடியும். அதனால், மருத்துவ துறையில் இவர்களுக்கான தேவைகள் அதிகம். மேலும், ஒரு சில தனியார் கல்லூரிகள், இன்டர்ன்ஷிப் படிப்புடன் நான்கு ஆண்டுகள் கொண்ட பிஎஸ்.சி., பட்டப்படிப்பை வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.
ஆப்ரேஷன் தியேட்டர் டெக்னாலஜி
அறுவை சிகிச்சை அறையில் தேவைப்படும் மருத்துவ உபகரணங்கள் பற்றி முழுவதுமாக படிக்கும் முக்கியத்துவம் நிறைந்த படிப்பு. அறுவை சிகிச்சையின் போது, மருத்துவருக்கு இணையாகவும், அறுவை சிகிச்சைக்கு முன், அறை மற்றும் தேவைப்படும் கருவிகளை சுத்தப்படுத்தி வைப்பது என பல்வேறு வேலைகளை மேற்கொள்கின்றனர், ஆப்ரேஷன் தியேட்டர் டெக்னீஷியன்ஸ். இதில், ஆப்ரேஷன் தியேட்டர் டெக்னாலஜி, ஆப்ரேஷன் தியேட்டர் மேனேஜ்மென்ட், ஆப்ரேஷன் தியேட்டர் டெக்னிக்ஸ் மற்றும் சர்ஜரிக்கல் டெக்னாலஜி ஆகிய பிஎஸ்.சி., படிப்புகளும், டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளும் வழங்கப்படுகிறது.
டயாலிசஸ் டெக்னாலஜி
மனித உடலின் ஆரோக்கியத்திற்கு, இரத்தத்தை சுத்தப்படுத்தும் சிறுநீரகத்தின் பங்கு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. சிறுநீரகங்கள் நன்கு வேலை செய்கையில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், சிறுநீரகங்கள் சேதமடைதல், பிற நோய் தொற்றுகளால் ஏற்படும் சிறுநீரக பாதிப்பு போன்ற காரணங்களால் சிறுநீரகங்கள் செயல் இழந்தால், மேற்கொள்ளப்படும் சிகிச்சை தான் டயாலிசஸ். இந்த சிகிச்சைக்கு, டயாலிசஸ் டெக்னிஷியன்களின் தேவை அவசியம். அதனால், அனைத்து மருத்துவம் மற்றும் சுகாதார துறைகளில் வேலைவாய்ய்புகளை எளிதில் பெற முடியும்.
பிஎஸ்.சி., டயாலிசஸ் டெக்னாலஜி படிப்பில், டயாலிசஸ் இயந்திரத்தை பொருத்துதல், ஸ்டெர்லிலைசேஷன் கலவை தயாரித்தல், நோயாளியை கண்காணித்தல், டயாலிசஸ் இயந்திரத்தை இயக்குதல், மேற்பார்வை செய்தல், இரத்த ஓட்டத்தை கணக்கிடுதல், இயந்திரத்தை சுத்தம் செய்தல் மற்றும் ஆய்வு செய்தல் உள்ளிட்டவற்றை படிக்கலாம்.
ஆடியாலஜி அண்ட் ஸ்பீச் லேங்குவேஜ் பெதாலஜி
கேட்பதில் மற்றும் பேசுவதில் குறைபாடுள்ள குழந்தைகள், கேட்கும் திறன் பேசும் திறனை இழந்தவர்கள், திக்குவாய் போன்ற பிரச்சனைக்கு உட்பட்டவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அவர்களது குறைபாடுகளை கண்டறிந்து, அதைக் குணப்படுத்தும் சிகிச்சை முறைகள் பற்றி கற்றுக் கொடுக்கும் படிப்பு இது!
பிளஸ் 2வில் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களை முதன்மை பாடமாக படித்து, தேர்ச்சி பெற்ற மாணவர்கள், மூன்று வருட பி.எஸ்சி., படிப்புடன், ஒரு வருட இன்டன்ஷிப் பயிற்சியும் சேர்த்து மொத்தம் 4 ஆண்டுகள், இந்த படிப்பை படிக்க வேண்டும். மருத்துவமனைகள் மற்றும் காது கேளாதோர் கல்வி நிறுவனங்களில், ஆடியாலஜிஸ்ட் மற்றும் ஸ்பீச் தெரபிஸ்ட்களுக்கான வாய்ப்புகள் அதிகம். மேலும், இத்துறையில் பட்டப்படிப்பை படித்தவர்கள் தனியாக கிளினிக் வைக்கலாம் அல்லது தனிப்பட்ட முறையில் குறைபாடு இருக்கிறவர்களின் வீடுகளுக்குச் சென்று சேவை செய்யலாம். வெளிநாட்டிலும் நல்ல வேலைவாய்ப்பு உள்ளது.
மெடிக்கல் ரெக்காடு சயின்ஸ்
நர்சிங் ஹோம் தொடங்கி சூப்பர் மல்டி ஸ்பேஷாலிட்டி ஹாஸ்பிட்டல்கள் அனைத்திலும், நோயாளிகளின் விவரங்கள் மற்றும் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் பற்றின முழு விவரங்களை பதிவு செய்து வைத்திருப்பது கட்டாயம். எனவே, தொழில்நுட்ப காலத்திற்கு ஏற்றவாரு, மின்னணு சாதன அமைப்பில் எவ்வாறு விவரங்களை பதிவு செய்வது, அதன் விதிமுறைகள், எத்தகைய தகவல்கள் இடம்பெற வேண்டும் உள்ளிட்டவற்றை பற்றி படிக்கும் படிப்பு!
வேலை வாய்ப்புகள் அதிகம் இருக்கும் இத்துறையில், பி.எஸ்சி., பட்டப்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள், பிளஸ் 2வில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவை எடுத்து படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கவனம் சிதறாமல் வேலை பாக்கும் திறன், நேரத்தை நிர்வகிக்கும் திறன், தகவல்களை சேகரிக்கும் திறன்களை வளர்த்து கொள்வது அவசியம்.
ரெஸ்பிரேடரி தெரபி
புற்றுநோய், ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, நிமோனியா மற்றும் இருதய நோய்களால் ஏற்படும் சுவாச பிரச்சனைகளுக்கு தீர்வுகாண கூடிய துணை மருத்துவ படிப்பு இது. மருந்துகளை நிர்வகித்தல், கார்டியோ பல்மோனாரரி சிகிச்சை தொடர்பான உபகரணங்களை கையாள்வது, ஆக்ஸிஜன் மற்றும் பிற வாயுக்களின் அளவை தீர்மானிப்பதற்கு இரத்த மாதிரிகள் பகுப்பாய்வு செய்தல், செயற்கை மூச்சுக் குழாய்களை நிர்வகித்தல், ஜெஸ்ட் எக்ஸ்ரேஸ், முக்கிய சுவாச அறிகுறிகளை மதிப்பீடு செய்தல், நோயாளிகளுக்கு மறுவாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் என பல்வேறு பிரிவுகளைப் பற்றி விரிவாக கற்றுக் கொடுக்கும் படிப்பு. இதில், இன்டர்ன்ஷிப் பயிற்சியுடன் பி.எஸ்சி., பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.
அனஸ்திஸ்யா டெக்னாலஜி
நோயாளிகளின் உடல் தகுதிகளை ஆராய்ந்து, அறுவை சிகிச்சையின் போது அவர்களுக்கு போடப்படும் மயக்க மருந்தின் அளவை நிர்ணயிக்கும் முக்கிய பணியினை மேற்கொள்பவர்கள் தான் அனஸ்திஸ்யா டெக்னாலஜிஸ்ட்கள்! மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கும், தீவிர மருத்துவ பராமரிப்பு பிரிவுகளிலும் இவர்களது பணி பெறும் அளவில் தேவைப்படுகிறது.
மயக்க மருந்து உபகரணங்கள், மயக்க மருந்தின் நுட்பங்கள் மற்றும் நோயாளிகளின் உடல் தகுதிக்கு ஏற்றவாறு மயக்க மருந்தின் அளவை கணக்கிடும் முறைகள் மற்றும் மயக்க மருந்தை செலுத்தியவுடன் கண்காணிக்கும் விதிமுறைகள் போன்றவை, இளநிலை பி.எஸ்சி.,-அனஸ்திஸ்யா டெக்னாலஜி பட்டப்படிப்பில் கற்றுத்தரப்படுகிறது. சி.சி.யு., மற்றும் ஐ.சி.யு., பிரிவிலும், அறுவை சிகிச்சைக்கு முன் மயக்க மருந்து வழங்கும் மயக்க மருந்து வல்லுநர்களாகவும், அறுவை சிகிச்சை அறையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் இணைந்தும் வேலை செய்யலாம். எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு பிறகு அனஸ்திஸ்யா பிரிவில் ஸ்பெஷலைஸ் செய்பவர்களுக்கு வாய்ப்புகள் பிரகாசம்.
கார்டியோ வாஸ்குலர் டெக்னாலஜி
இதயம் மற்றும் அதன் தொடர்பான வாஸ்குலர் பிரச்சினைகளை கண்டறிந்து, அதற்கு தகுந்த சிகிச்சையளிக்க மருத்துவர்களுக்கு, கார்டியோ வாஸ்குலர் டெக்னாலஜிஸ்ட்கள் (சி.வி.டி.,) உதவுகின்றனர். இரத்த ஓட்ட நிலைகள் மற்றும் இருதயத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை மிக துல்லியமாக கண்காணித்து மருத்துவ அறிக்கையை தயார் செய்வதும் இந்த கார்டியலஜி தொழில்நுட்ப வல்லுநர்களே!
அல்ட்ராசவுண்ட் மூலம் இதய படங்களை எடுக்கும் தொழில்நுட்ப முறைகள், எடுத்த படங்களை பகுப்பாய்வு செய்தல் மற்றும் நோய் கண்டறியும் செயல்முறைகள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கின்றனர். இவர்களுக்கான தேவைகள் மருத்துவ துறைகளில் மிக அதிகம். அதனால், இப்பாடப் பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பின்மை என்பது இல்லை.