பொருத்தமான வேலை வாய்ப்பின்மையே - பெரும் பிரச்சனை
அதிக ஊதியம் வழங்கும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவது குறித்து கருத்து தெரிவித்துள்ள, ‘நிதி ஆயோக்’, ‘நமது நாட்டில், வேலை வாய்ப்பின்மை ஒரு பெரிய பிரச்சனை இல்லை.
ஆனால், பொருத்தமான வேலை வாய்ப்பின்மையே, பெரும் பிரச்சனையாக உள்ளது’ என்று தெரிவித்துள்ளது!
இந்தியாவில், புதிய திட்டங்களை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ள ‘நிடி ஆயோக்’, சமீபத்தில் வெளியிட்டுள்ள மூன்றாண்டு செயல் திட்டத்தில் இந்த கருத்தை தெரிவித்துள்ளது. ‘இந்தியாவில் வேலை வாய்ப்பில்லாதோர் எண்ணிக்கை அதிகரிக்கும்’ என்ற கருத்து சிலரால் முன்வைக்கப்படும் நிலையில், ‘தகுதிக்கு ஏற்ற வேலை மற்றும் ஊதியம் கிடைப்பதே நம் நாட்டின் பெரும் பிரச்சனை’ என்று நிடி ஆயோக் தெரிவித்துள்ளது.
இந்தநிலையை போக்க, ‘அதிக உற்பத்தி மற்றும் அதிக ஊதியம் அளிக்கும் வேலைகள் உருவாக்கப்பட வேண்டும். தென்கொரியா, தைவான், சீனா போன்ற நாடுகளை போன்று, இந்தியாவும், உள்நாட்டில் அதிக உற்பத்தி செய்து, உலக சந்தையில் சாதனை படைக்க வேண்டும்.
சீனாவில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால், பல்வேறு சவால்களை அந்நாடு சந்தித்து வரும் நிலையில், இளைஞர்களை அதிகளவில் கொண்டுள்ள இந்தியா, சீனாவுக்கு ஒரு மாற்றாக அமையும் வகையில் செயல்பட வேண்டிய நேரமிது. அதற்கு ஏற்ப, இந்தியாவில் தற்போதுள்ள தொழிலாளர் சட்டத்தில், உரிய மாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம்’, என்றும் தெரிவித்துள்ளது.