பிள்ளைகளுடன் நேரம் ஒதுக்கினால் போதும்.... ப்ளூவேல் விளையாட்டு மனதில் நுழையாது... அன்புமணி இராமதாஸ்
பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடன் நேரம் ஒதுக்கினால் போதும், இந்த ப்ளூவேல் விளையாட்டை விளையாட வேண்டும் என்ற எண்ணமே அவர்களுக்கு வராது என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார்.
ப்ளூவேல் என்ற விளையாட்டு ரஷ்யாவில் பிரபலமாகி தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. 50 நாள்கள் ஆன்லைனில் விளையாடப்படும் இந்த விளையாட்டின் இறுதியில் விளையாடுவோர் தற்கொலை செய்து கொள்வதே இந்த விளையாட்டின் சாராம்சமாகும். இதை தடை செய்ய முடியாத நிலை உள்ளது.
பா.ம.க. இளைஞரணித் தலைவரும், எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், ‘நீல திமிங்கலம்' விளையாட்டு மட்டுமே குழந்தைகளின் உயிரைக் குடிப்பதாகக் கருத முடியாது. குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் கைகளில் தாராளமாக புழங்கும் செல்போன்கள், அழிவுக்கான ஆயுதமாகவே பயன்படுகின்றன. செல்போன்கள் மூலம் ‘செல்பி' எடுத்துக்கொள்வது அனைவராலும் விரும்பப்படுவது என்றாலும், இந்தியாவில் மிகவும் ஆபத்தான விளையாட்டாக மாறி வருகிறது.
மனதைக் கெடுக்கும் செல்போன்கள் உடல்நலத்தையும் கெடுக்கின்றன. இளைஞர்கள் மற்றும் குழந்தைகளின் விளையாட்டு உலகம் என்பது திறந்தவெளி விளையாட்டுத் திடலில் இருந்து செல்போனுக்கு மாறி விட்டது. இதில் பெற்றோர்களிடத்தில் தான் தவறு இருக்கிறது.
நேரம் ஒதுக்குங்கள் தேவைகள் அதிகரித்து விட்ட நிலையில், அதை சமாளிப்பதற்காக பெற்றோர் அளவுக்கு அதிகமாக உழைக்க வேண்டியிருக்கிறது. இதனால் அவர்களுக்கு குழந்தைகளுடன் செலவிட நேரம் இருப்பதில்லை. எனவே பிள்ளைகளிடத்தில் ஏற்படும் வெறுமையையும், பாசத்திற்கான வெற்றிடத்தையும் தான் செல்போன்கள் கைப்பற்றிக் கொண்டு சீரழிக்கின்றன.
சாத்தான் நுழையாது எனவே, பெற்றோர்கள் தங்களது நாளின் குறிப்பிட்ட பகுதியை குழந்தைகளுக்காக ஒதுக்க வேண்டும். குழந்தைகளுக்கான நாளில் பள்ளியிலும், பிற இடங்களிலும் அவர்களின் அனுபவத்தை கேட்டு, அதற்கு பதில் அளித்தால் குழந்தைகள் மனதில் வெறுமை நீங்கி மகிழ்ச்சி நிறையும். உண்மையான மகிழ்ச்சி நிறைந்த குழந்தைகளின் மனதில் ‘நீல திமிங்கலம்' உள்ளிட்ட எந்த சாத்தானும் நுழைய முடியாது என்று தனது அறிக்கையில் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.