சத்தீஸ்கர் மாநிலம் கோரியா கிராம மக்கள் தாகம் தீர்க்க தனியாளாக குளம் வெட்டி சாதனை
கோரியா கிராமத்தின் தண்ணீர் பிரச்னையை தீர்க்க, யாருடைய உதவியுமின்றி, 27 ஆண்டுகளாக, தனித்து குளம் வெட்டியவரை, பொதுமக்கள் பாராட்டி உள்ளனர்.
சத்தீஸ்கரில், முதல்வர் ரமண் சிங் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, கோரியா மாவட்டத்தில் உள்ள, மலை கிராமத்தைச் சேர்ந்தவர், ஷியாம் லால், 42. இக்கிராமத்தில், 27 ஆண்டுகளுக்கு முன், கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது.தண்ணீர் பிரச்னையை தீர்க்க, மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.பல ஆண்டுகளாக, தண்ணீரின்றி தவிக்கும் மக்களுக்கு உதவ, அதே கிராமத்தைச் சேர்ந்த, 15 வயது ஷியாம் லால் முன்வந்தார்.
கிராமத்தில் குளம் வெட்டி, மழைநீரை சேமித்தால், தண்ணீர் பிரச்னை தீரும் என, ஷியாம் லால் கூறியதை கேட்டு, கிராம மக்கள் சிரித்தனர்.ஆனால், குளம் வெட்டுவதற்கு இடத்தை தேர்ந் தெடுத்ததுடன், தனியாளாக, ஷியாம், குளம் வெட்ட துவங்கினார். மனம் தளராமல், 27 ஆண்டுகளாக, பெரியளவில், ஷியாம், குளம் வெட்டி முடித்தார்.மழைக் காலத்தில், இந்த குளம் நிரம்பியதால், கிராமத்தின் நீர்மட்டம் உயர்ந்தது. இந்த குளத்து நீரை, கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர்.
கால்நடைகளும், இந்த குளத்து நீரை குடிக்கின்றன. குளத்து நீரை பயன்படுத்தி வரும் கிராம மக்கள், தற்போது, 42 வயதாகும் ஷியாமை, வாயார பாராட்டி வருகின்றனர்.பா.ஜ.,வைச் சேர்ந்த, எம்.எல்.ஏ., ஷியாம் பிஹாரி ஜெய்ஸ்வால், ஷியாம் லாலை பாராட்டி, 10 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கினார்.மாவட்ட கலெக்டர் நரேந்திர துக்கலும், ஷியாமை பாராட்டி, தேவையான உதவிகள் செய்வதாக கூறினார்.