பிளஸ் 1மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு எழுதுவதற்கான ’புளூ பிரின்ட்’ வெளியிட ஆசிரியர்கள் கோரிக்கை
பிளஸ் 1பொது தேர்வுக்கு, தேர்வுத்துறை சார்பில், ’புளூ பிரின்ட்’ வினா வடிவமைப்பு குறிப்பை வெளியிட வேண்டும் என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய அரசின் பல்வேறு நுழைவு தேர்வுகளில், தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெறும் வகையில், மாணவர்களை தயார்படுத்த, பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதனால், பிளஸ் ௧ வகுப்புக்கு, பொது தேர்வு கட்டாயம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனால், அனைத்து பள்ளிகளும், பிளஸ் 1 பாடங்களை கட்டாயம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 பொது தேர்வு அறிமுகம் ஆகிறது. பாடவாரியான மதிப்பெண், 200லிருந்து, 100ஆக குறைக்கப்பட்டுள்ளது. அகமதிப்பீட்டு மதிப்பெண், செய்முறை, வருகைப் பதிவுக்கு மதிப்பெண் என, பல விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
தேர்வில் எந்த பாடத்தில், எத்தனை மதிப்பெண் வினா இடம் பெறும் என்ற, ’புளூ பிரின்ட்’ குறிப்பு முறை ஒழிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிளஸ் ௧ மாணவர்களுக்கு, ’புளூ பிரின்ட்’ முறை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும் என,ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர், சுரேஷ் கூறியதாவது:
பிளஸ்1 வகுப்புக்கு, பொது தேர்வு கட்டாயமாக்கியது வரவேற்கத்தக்கது. அதே நேரம், ’புளூ பிரின்ட்’ முறை நீக்கப்பட்டுள்ளது. அதனால், தேர்வுக்கு எப்படி தயாராவது என, அரசு பள்ளி மாணவர்கள் கடும் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். பழைய பாடத்திட்டம், பழைய தேர்வு முறைப்படி, மாணவர்கள் தயார் ஆகிவந்தனர்.
பத்தாம் வகுப்பு வரை, ’புளூ பிரின்ட்’ அடிப்படையில் தயாரானவர்கள், திடீரென புத்தகம் முழுவதையும் படித்தால் மட்டுமே, தேர்ச்சி பெற முடியும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.புதிய தேர்வு முறையில் ஆறாம் வகுப்பிலிருந்து, மாணவர்களை தயார்படுத்த வேண்டும்.
ஆனால், நேரடியாக, பிளஸ் 1 மாணவர்களுக்கு சிக்கலான வினாத்தாள் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை சமாளிக்க, ’புளூ பிரின்ட்’ வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.