பாதுகாப்பு துறைக்கு முதல் முறையாக பெண் அமைச்சரை நியமித்த பிரதமர் மோடி
நாட்டின் பாதுகாப்பு துறைக்கு முதல் முறையாக பெண் அமைச்சரை நியமித்து பாராட்டுகளைப் பெற்றுள்ளார் பிரதமர் மோடி. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று 3-வது முறையாக மாற்றி அமைக்கப்பட்டது. இணை அமைச்சர்களாக இருந்த நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட 4 பேர் கேபினட் அமைச்சர்களாகினர். இணை அமைச்சர்களாக 9 பேர் பொறுப்பேற்றனர். நாட்டின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்புத் துறையை நிர்மலா சீதாராமனுக்கு வழங்கி பெரும் பாராட்டைப் பெற்றுள்ளார் பிரதமர் மோடி.
அருண் ஜேட்லி
பிரதமர் மோடி பதவியேற்ற போது நிதித்துறை அமைச்சர் அருண்ஜேட்லி வசம் இருந்தது பாதுகாப்புத் துறை. பின்னர் மனோகர் பாரிக்கர் பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
மனோகர் பாரிக்கர்
3 ஆண்டுகள் பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவியை வகித்து வந்த மனோகர் பாரிக்கர் அண்மையில் கோவா மாநில முதல்வரானார். இதையடுத்து மீண்டும் அருண்ஜேட்லி வசமே பாதுகாப்புத் துறை வந்தது.
நிர்மலா சீதாராமன்
அமைச்சரவை மாற்றத்தின் போது நிதின் கட்காரிக்குதான் பாதுகாப்பு துறை ஒதுக்கப்படும் என கூறப்பட்டு வந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் அமைச்சரான நிர்மலா சீதாராமனுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவி வழங்கி அசத்தியுள்ளார் பிரதமர் மோடி
முதல் தமிழ் பெண்மணி
இதற்கு முன்னர் 1975, 1980-ல் பாதுகாப்புத் துறை அமைச்சராக பிரதமராக இருந்த இந்திரா காந்தி வகித்திருக்கிறார். முதல் முறையாக பாதுகாப்புத் துறைக்கு தனி பெண் அமைச்சராக நிர்மலா சீதாராமனை நியமித்திருக்கிறார் பிரதமர் மோடி. நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் பதவியை வகிக்கும் முதல் தமிழ் பெண்மணி நிர்மலா சீதாராமன் என்பது குறிப்பிடத்தக்கது.