நதிகளை மீட்போம் என்ற வாசகத்துடன், ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள், தமிழகம் முழுவதும், சாலையோரம் அமைதியாக நின்று, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நாட்டில் அழியும் நிலையில் உள்ள நதிகளை மீட்க வேண்டும்; அவற்றுடன், மிகுதியான நீர் செல்லும் நதிகளை இணைத்து, அனைத்து நதிகளையும் வற்றாத நதிகளாய் மாற்ற வேண்டும் என்ற எண்ணம், தற்போது பரவலாக, அனைத்து தரப்பினர் மத்தியிலும் எழுந்துள்ளது.
இது தொடர்பாக, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தன்னார்வலர்கள் இணைந்து, 'நதிகளை மீட்போம்' என்ற, இயக்கத்தை உருவாக்கி உள்ளனர்.
தமிழகத்தில் உள்ள, 'நதிகளை மீட்போம்' இயக்கத்தினர், நேற்று காலை, 8:00 மணி முதல், 11:00 மணி வரை, முக்கிய சாலை ஓரங்களில், நீல நிற உடையணிந்து, 'நதிகளை மீட்போம்; பாரதம் காப்போம்' என்ற, வாசகம் இடம் பெற்ற அட்டையுடன், அமைதியாக நின்றனர்.
இது குறித்து, அவர்கள் கூறியதாவது: நதிகள் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் குறைந்து வருகிறது. அதனால், பல நதிகள் மாசடைந்து, பயன்பாடற்ற நிலையில் உள்ளன. நதிகள் அழிந்தால், நாகரிகம் அழியும். இதை, நாட்டு மக்களுக்கு அறிவிக்கும் விதமாக, இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில், தமிழகம் முழுவதும், 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இந்த இயக்கத்திற்கு, கிராமம், நகரம் வித்தியாசமின்றி, லட்சக்கணக்கானோர், 'மிஸ்டு கால்' கொடுத்து, ஆதரவு தெரிவித்தனர். மேலும், விவசாயிகள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என, பல துறையினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.