அடுத்த கல்வி ஆண்டு முதல் மருத்துவ சேர்க்கைக்கு ஆன்லைன் கவுன்சிலிங்
”வரும் கல்வி ஆண்டு முதல், ’ஆன்லைன்’ மருத்துவ கவுன்சிலிங் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,” என, மருத்துவ கல்வி இயக்குனர், எட்வின் ஜோ கூறினார்.
தமிழகத்தில், ’நீட்’ தேர்வு அடிப்படையில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான, மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்தாண்டு, 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்தனர்; அதில், 45 ஆயிரம் பேருக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
அதனடிப்படையில், சென்னையில் உள்ள, அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில், கவுன்சிலிங் நடைபெறுகிறது. இதற்கு, 150க்கும் அதிகமான, மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.
கணினி இயக்குதல் போன்ற பணிகளுக்கு, தனியார் நிறுவன ஊழியர்களும் பயன்படுத்தப்படுகின்றனர். இவர்களுக்கு, உணவு, குடிநீர் வழங்க, தினமும் ஒருவருக்கு, 250 ரூபாய் செலவிடப்படுகிறது. மருத்துவமனை வளாகத்தில், கவுன்சிலிங் நடைபெறுவதால், நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
அதேபோல், கவுன்சிலிங்கில், பெற்றோர், மாணவர்கள் என, ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிகின்றனர். அவர்களுக்கு, போதுமான குடிநீர், உணவு, கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தி தருவதில் சிக்கல் ஏற்படுகிறது. கவுன்சிலிங்குக்கு வந்த பெற்றோர், ’அடிப்படை வசதிகள் இல்லை’ என, அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.
இதனால், வரும், 2018 - 19 கல்வி ஆண்டு முதல், ’ஆன்லைன்’ வாயிலாக, மருத்துவ கவுன்சிலிங் நடத்த, மருத்துவ கல்வி இயக்ககம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின் ஜோ கூறுகையில், ”அகில இந்திய மருத்துவ கவுன்சிலிங், ஆன்லைனில் நடைபெறுகிறது. அதேபோல், மாநில மருத்துவ கவுன்சிலிங்கும், இணையதளம் வாயிலாக நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
”இதற்காக, அண்ணா பல்கலையிடம் தொழில்நுட்ப உதவி கோரப்பட்டு உள்ளது. வரும் கல்வி ஆண்டில், மருத்துவ மாணவர் சேர்க்கை, ஆன் - லைனில் நடத்த வாய்ப்பு உள்ளது,” என்றார்.
நாளை இரண்டாம் கட்ட கவுன்சிலிங்
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான, இரண்டாம் கட்ட கவுன்சிலிங், நாளை நடைபெற உள்ளது. அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல்கட்ட கவுன்சிலிங், ஆக., 24ல் துவங்கி, 30ல் முடிவடைந்தது.
இதில், அரசு ஒதுக்கீட்டில் உள்ள, 3,530 எம்.பி.பி.எஸ்., இடங்களும் நிரம்பின. அதேபோல், அரசு கல்லுாரிகளில் உள்ள, 156 பி.டி.எஸ்., எனும் பல் மருத்துவ இடங்களும் நிரம்பி விட்டன.
ஆனால், சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டுக்கு உள்ள, 1,045 பி.டி.எஸ்., இடங்களில், 860 இடங்கள் தான் நிரம்பி உள்ளன. அதில், 185 இடங்கள் காலியாக உள்ளன.
இந்நிலையில், ’முதல்கட்ட கவுன்சிலிங்கில் இடம் பெற்ற மாணவர்கள், தேர்ந்தெடுத்த மருத்துவ கல்லுாரிகளில் சேர, இரண்டு நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் சேராவிட்டால், அந்த இடங்கள் காலியாக அறிவிக்கப்படும்.
’ஏற்கனவே காலியாக உள்ள, 185 பி.டி.எஸ்., இடங்களுடன் சேர்த்து, நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்கும், இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கில் நிரப்பப்படும்’ என, மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.