இறங்குமுகத்தில் இந்திய பொருளாதாரம்.. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பெரும் அடி!
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த ஓராண்டாக படிப்படியாக குறைந்தபடி உள்ளது கவலையளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. 2016 மார்ச் மாதம் இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 9.1 சதவீதமாக சிறப்பாக இருந்தது. ஆனால் அதன்பிறகு ஒவ்வொரு காலாண்டுக்குமே, வளர்ச்சி குறைந்தபடிதான் உள்ளது. உற்பத்தி துறை அதிகப்படியான இழப்பை சந்தித்துள்ளது ஜிடிபி குறைய முக்கிய காரணம். கடந்த ஆண்டு 9.4 சதவீதமாக இருந்த நிதி, ரியல் எஸ்டேட், இன்சூரன்ஸ் மற்றும் சேவை துறைகளின் வளர்ச்சி என்பது இவ்வாண்டு ஏப்ரல்-ஜூன் வரையிலான காலாண்டில், 5.7 சதவீதம் என்ற அளவிற்கு குறைந்துள்ளது
பண மதிப்பிழப்பு
மோடி அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கைதான் இந்திய பொருளாதர வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என்று கைகாட்டுகிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். டிசம்பருக்கு பிறகு இந்திய பொருளாதாரம் மிகவும் வேகமாக சரிய இது முக்கிய காரணம். கட்டுமானத் துறையில் இந்த வீழ்ச்சி மக்களுக்கே கண்கூடாக தெரிகிறது
சீனா முன்னிலை
மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறைந்துள்ளளபோதிலும், இப்போதுமே உலகின் முன்னணி பொருளாதார வளர்ச்சி நாடுகளில் ஒன்றாகத்தான் இந்தியா தொடருகிறது. ஆனால் சீனா, இந்தியாவைவிட சற்று அதிக வளர்ச்சியை கைவசம் வைத்துள்ளது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.9 சதவீதமாக உள்ளது.
இறங்குமுகத்தில் இந்திய பொருளாதாரம்
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி எப்படி படிப்படியாக குறைந்து கொண்டு வந்தது என்பதை இந்த டிவிட்டர் பயனரின் மேப் சுட்டிக்காட்டுகிறது. அது இறங்கு வரிசையில் செல்வது மேப்பில் தெளிவாக காட்டப்பட்டுள்ளது.
நஷ்டமே அதிகம்
பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்பு பணம் ஒழிந்துவிடும், பொருளாதாரம் மேம்படும் என்றெல்லாம் அரசு கூறியிருந்தாலும், அதனால் பலனைவிட நஷ்டமே அதிகம் என்பதை ரிசர்வ் வங்கி இரு தினங்கள் முன்பு வெளியிட்ட புள்ளி விவரத்தால் அம்பலமாகிவிட்டது. சீராக சென்ற பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க அளவுக்கு பண மதிப்பிழப்பு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக பொருளாதாரமும் சீராக இல்லை என்பதும் இந்த வீழ்ச்சிக்கு துணையாகிவிட்டது.