தமிழகத்தில் 5 நாள்களுக்கு மழை
தமிழகம் மற்றும் புதுச்சேரியின் அநேக இடங்களில் செப்.1-ஆம் தேதி முதல் செப்.5-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறியது: செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரையுள்ள காலகட்டத்தில் ஈரப்பதத்துடன் கூடிய கிழக்கு திசை காற்று, தமிழக வளிமண்டலத்தில் வீச வாய்ப்பு உள்ளது.
இதனால், தமிழகத்தின் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். தென், வட தமிழக மாவட்டங்களின் உள் பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னையைப் பொருத்தவரை புறநகர்ப் பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
ஜூன் 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை காலகட்டத்தில், தென் மேற்கு பருவமழை 250 மிமீ மழை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 23 சதவீதம் அதிகம்.
மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாள்களாக மழை பெய்தது. இந்த நிலையில், மேற்கு திசை காற்றில் ஏற்பட்ட வேக மாறுபாடு மற்றும் வெப்பச் சலனம் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் பல இடங்களில் மழை பெய்துள்ளது. இந்த மழை சில இடங்களில் வியாழக்கிழமையும் தொடர்ந்தது.