இன்று விண்ணில் பாயுது ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., செயற்கைக்கோள்
இயற்கை பேரிடர் காலங்களில் தரை, வான் மற்றும் கடல் வழி பயணத்திற்கு வழிகாட்டும் 'ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., - 1 எச்' என்ற அதிநவீன செயற்கைக்கோள் இன்று இரவு 7:00 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான 29 மணி நேர கவுன்ட்-டவுண் நேற்று மதியம் 2:00 மணிக்கு துவங்கியது.
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., விண்வெளி திட்டத்தின் கீழ் ஏற்கனவே ஏழு செயற்கை கோள்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான 'இஸ்ரோ' விண்ணில் செலுத்தி உள்ளது. இந்த செயற்கைக்கோள்களின் ஆயுட்காலம் நிறைவடைவதை ஒட்டி புதிய செயற்கைக்கோள்கள் அனுப்பப்படும். தற்போது 'ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., - 1 எச்' என்ற செயற்கைக்கோள், பி.எஸ்.எல்.வி., சி- 39 ராக்கெட் மூலம் இன்று இரவு 7:00 மணிக்கு செலுத்தப்படுகிறது.
இதற்கான 29 மணி நேர கவுன்ட்-டவுண், நேற்று மதியம் 2:00 மணிக்கு துவங்கியது. இந்த செயற்கைக்கோள் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து, விண்ணில் ஏவப்பட உள்ளது.
'ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., - 1 எச்' செயற்கைக்கோள், 1,425 கிலோ எடை உடையது. விண்ணில் ஏவப்பட்ட 19வது நிமிடத்தில், பூமிக்கு அருகில் 284 கி.மீ., உயரத்திலும், பூமிக்கு 20 ஆயிரத்து 650 கி.மீ., தொலைவிலும் புவி வட்ட பாதையில் நிலை நிறுத்தப்படும். இதன் ஆயுட்காலம், 10 ஆண்டுகள்.
இயற்கை பேரிடர் காலங்களில் தரை, வான் மற்றும் கடல் வழி பயணத்திற்கு
இந்த செயற்கைக்கோள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் 1,500 கி.மீ., சுற்றளவு பரப்புக்கு கடல் வழிகளையும், கடல் எல்லைகளையும் துல்லியமாக கண்காணிக்க முடியும். தரை, வான் வெளியில் செல்லும் அனைத்து வாகனங்களையும் கண்காணிக்க முடியும்.