அடுத்த கல்வியாண்டு முதல் ஆன்-லைனில் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு?
வரும் கல்வியாண்டு (2018-19) முதல் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் கலந்தாய்வு ஆன்-லைன் மூலம் நடத்தப்பட வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் நீட் தேர்வின் அடிப்படையிலேயே மருத்துவ (எம்.பி.பி.எஸ்.) மற்றும் பல் மருத்துவ (பிடிஎஸ்) மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில் சுமார் 45 ஆயிரம் பேருக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, ஆகஸ்ட் 24 -ஆம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
அதிக மனித வளம்: கலந்தாய்வு நடத்துவதற்கான பணியில் மருத்துவக் கல்வி இயக்ககம், ஓமந்தூரார் மருத்துவமனை ஊழியர்கள் என சுமார் 150 -க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது தவிர கலந்தாய்வில் இடங்களைத் தேர்ந்தெடுப்பதற்காக கலந்தாய்வு நடைபெறும் அரங்கில் உள்ள கணினிகளை இயக்குதல் உள்ளிட்டப் பணிகள் அவுட் - சோர்சிங் முறையில் தனியார் ஊழியர்களைக் கொண்டு நடைபெறுகிறது. குறுகிய நாள்களில் கலந்தாய்வுப் பணிகளை முடிக்க வேண்டியுள்ளதால் காலை 8 மணி முதல் இரவு 10 மணிக்கும் மேல் என அதிகாரிகள், ஊழியர்கள் சுமார் 14 மணி நேரம் பணி புரிய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
பணம் விரயம்: கலந்தாய்வு நடைபெறும் இடத்தில் தண்ணீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள், திரைகள், காத்திருப்பு கூடாரம், மின்சாரம், அதிகாரிகளுக்கான உணவு உள்ளிட்டவற்றுக்கு கணிசமான தொகை செலவிடப்படுகிறது. உணவு மட்டுமே ஒரு வேளைக்கு 250 பேருக்கு ஆர்டர் செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் மாணவர்களும் பெற்றோரும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு வந்து கலந்தாய்வில் பங்கேற்றுச் செல்வதால் பணவிரயமும், நேர விரயமும் ஏற்படுகிறது. மேலும் இடங்களைப் பெற்ற உடன் அடுத்த நாளே குறிப்பிட்ட கல்லூரியில் சேருவதற்காவும் உடனே அவர்கள் செல்ல வேண்டியுள்ளது.
இணையதள கலந்தாய்வு: இதுபோன்ற சிக்கல்களைத் தவிர்க்க அகில இந்திய ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களுக்கு நடத்தப்படுவது போன்று இணையதளம் மூலம் கலந்தாய்வை நடத்தலாம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அவ்வாறு நடத்துவதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட அனைத்தும் மருத்துவக் கல்வி தேர்வுக்குழுவிடம் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
நன்மை என்ன? இணையதளத்தின் மூலம் கலந்தாய்வு நடத்தும்போது மேலும் வெளிப்படையாகவும், மாணவர்கள் தாங்கள் இருந்த இடத்தில் இருந்தே இடங்களைத் தேர்வு செய்யவும் முடியும்.
இதனால் அரசுக்கும், மாணவர்களுக்கும் அதிக வேலைப்பளு, பணவிரயம், நேர விரயம் உள்ளிட்டவை ஏற்படாது.
2 ஆண்டுகளாக முயற்சி: இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இணையதளத்தில் கலந்தாய்வை நடத்துவதற்கான முயற்சியில் மருத்துவக் கல்வி இயக்ககம் ஈடுபட்டு வருகிறது. ஆனால், தமிழக அரசு இது குறித்து சாதகமான பதிலைத் தெரிவிக்கவில்லை. எனினும் அடுத்த ஆண்டு முதல் இணையதளத்தின் மூலம் கலந்தாய்வு நடைபெறுவதற்கு வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் ஏ.எட்வின் ஜோ கூறுகையில், இணையதளம் மூலம் கலந்தாய்வு நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறோம்.
அடுத்த கல்வியாண்டில் இணையதள கலந்தாய்வு நடைபெற வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள தொழில்நுட்ப வல்லுநர்களுடன் அதிகாரப்பூர்வமற்ற கலந்துரையாடல் நடைபெற்றது.
எனினும் அண்ணா பல்கலைக்கழகத்தின் நடைமுறையைப் பின்பற்றுவதா அல்லது அகில இந்திய மருத்துவக் கலந்தாய்வு முறையைப் பின்பற்றுவதா என்பது குறித்து முடிவு செய்யப்படவில்லை என்றார் அவர்.