எம்.பி.பி.எஸ்., கவுன்சிலிங்கில் போலி இருப்பிட சான்றிதழ் : 4 மாணவர்களின் சேர்க்கை நிறுத்தம்
சென்னை : நீட் தேர்வு தொடர்பான சர்ச்சைகள் முடிந்து தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கான கவுன்சிலிங் சமீபத்தில் நடந்தது. கவுன்சிலிங்கை துவக்கி வைக்க வந்த போது பேசிய தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், போலி இருப்பிட சான்றிதழ் அளிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இதுவரை 4 பேர் போலி சான்றிதழ் கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனவும் கூறி இருந்தார்.
இந்நிலையில், போலி இருப்பிட சான்றிதழ் மூலம் மருத்துவ படிப்பில் சேர முயன்றவர்கள் அளித்த சான்றிதழ் போலி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கேரளாவைச் சேர்ந்த 3 மாணவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சேர்க்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. போலி இருப்பிட சான்றிதழ் அளித்து தமிழகத்தில் மருத்துவ படிப்பில் சேர முயன்ற ஆசிக் சுலைமான் என்ற மாணவனுக்கு சம்மனும் அனுப்பப்பட்டுள்ளது.
போலி இருப்பிட சான்றிதழ் அளித்த மாணவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிக் சுலைமான் போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் இருப்பதால், மற்ற 3 மாணவர்களின் மருத்துவ படிப்பு சேர்க்கை ரத்து செய்யப்பட்டுள்ளது. கேரள மாணவர்களுக்கு போலி சான்றிதழ் வழங்கிய விஏஓ, வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.