பி.டி.எஸ்., படிப்பில் 50 சதவீதம் நிரம்பியது
அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில், பி.டி.எஸ்., எனப்படும், பல் மருத்துவ படிப்பில், 50 சதவீத அரசு ஒதுக்கீட்டு இடங்கள் நிரம்பின.
தமிழகத்தில், அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டுக்கு, 3,534 இடங்கள்; சுயநிதி கல்லுாரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 592 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. பல் மருத்துவ கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டுக்கு, 1,198, பி.டி.எஸ்., இடங்களும், சுயநிதி கல்லுாரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 715 இடங்களும் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், 'நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில், சென்னை, பல்நோக்கு அரசு மருத்துவமனையில், 24 முதல் நடந்து வருகிறது.
ஐந்து நாட்களில், 3,009 எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்கள் நிரம்பி உள்ளன. இதில், ஆதிதிராவிடர், பழங்குடியினர் இடங்களை தவிர, அனைத்து அரசு கல்லுாரிகளிலும் உள்ள, எம்.பி.பி.எஸ்., இடங்கள் நிரம்பி உள்ளன. பொது பிரிவுக்கான கவுன்சிலிங், இன்றும் தொடர்கிறது.