நீட் தேர்வு: சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க அரசுக்கு உத்தரவு
பள்ளிகளில் நீட் தேர்வுக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் விதமாக சிறப்பு ஆசிரியர்களை நியமிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த எஸ்.கிருத்திகா என்ற மாணவி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'நான் பிளஸ் 2 தேர்வில் 1,184 மதிப்பெண்களுடன் 199.25 கட்-ஆஃப் மதிப்பெண்ணும், நீட் தேர்வில் 154 மதிப்பெண்ணும் பெற்றுள்ளேன். எனவே, மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் என்னை அனுமதிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களுக்கு பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில், கடந்த கல்வியாண்டில் போதிய பயிற்சி மற்றும் சிறப்பு வகுப்புகளை நடத்தியிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு மாநில அரசு மேற்கொள்ளவில்லை. ஆகையால் தான் நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் அதிகமானோர் தேர்ச்சி பெற முடியவில்லை.
மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவு மனுதாரருக்கு தற்போதும் கனவாகவே உள்ளது. நீட் விவகாரத்தில் கடைசி நேரத்தில் மத்திய அரசு எதிர்மறையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இதுதான் மாநிலத்தில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு பிரதான காரணமாகும்.
நீட் உள்பட போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையிலும், சர்வதேச தரத்துக்கு இணையாக பாடத்திட்டத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டுகளில் (2018-19, 2019-20) பாடத்திட்டத்தைச் சீரமைக்க எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை செயலாளர், தமது பதில் மனுவில் விரிவாக குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் நீட் தேர்வுக்கு பள்ளி மாணவர்களைத் தயார்படுத்தும் விதமாக சிறப்பு ஆசிரியர்களை தமிழக அரசு நியமிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், அரசு பயிற்சி மையங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பத்துடன், கிராமப்புற மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சியை வழங்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி கிருபாகரன், நீட் தேர்வு அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், மாணவி கிருத்திகாவின் மனுவை தள்ளுபடி செய்வதாக தெரிவித்தார்