மாரியப்பனுக்கு அர்ஜூனா விருது
ரியோ பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு 2017-ம் ஆண்டுக்கான அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் நடக்கும் விளையாட்டு போட்டிகளில் சிறப்பாக செயல்படும் விளையாட்டு துறையைச் சேர்ந்தவர்களுக்கான தேசிய விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது.
மிகச் சிறந்த திறமையை வெளிப்படுத்துவோருக்கு ராஜுவ்காந்தி கேல்ரத்னா விருதும், தொடர்ந்து சிறப்பாக செயல்படுவோருக்கு அர்ஜூனா விருதும் வழங்கப்படுகிறது. சிறந்த பயிற்சியாளருக்கு துரோணாசாரியார் விருதும், விளையாட்டு துறைக்கு வாழ்நாள் சேவை செய்தவர்களுக்கு தயான் சந்த் விருதும் வழங்கி கவுரவிக்கப்படுகிறார்கள்.
2017ம் ஆண்டுக்கான விருதுகள் நேற்று இரவு அறிவிக்கப்பட்டன. ராஜிவ்காந்தி கேல்ரத்னா மற்றும் அர்ஜூனா விருதுக்குரியோரை, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.கே.தாகுர் தலைமையிலான குழு தேர்ந்தெடுத்தது. துரோணாசாரியார் மற்றும் தயான்சந்த் விருதுக்குரியவர்களை, முன்னாள் பாட்மின்டன் வீரர் பி. கோபிசந்த் தலைமையிலான குழு தேர்ந்தெடுத்து. இந்த ஆண்டுக்கான விருதுகளில், பாரா ஒலிம்பிக் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் கவுரவிக்கப்பட்டுள்ளனர். அதில், தமிழகத்தைச் சேர்ந்த தங்கவேலு மாரியப்பன், அர்ஜூனா விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில், உயரம் தாண்டுதலில், தங்கம் வென்று அசத்தியவர் மாரியப்பன். சமீபத்தில் நடந்த மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கலக்கிய ஹர்மன்பிரீத் கவுர் உள்பட, 17 பேருக்கு அர்ஜூனா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பை போட்டியின் அரை இறுதியில், ஆஸ்திரேலியாவு்ககு எதிராக, 115 பந்துகளில், 171 அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார் ஹர்மன்பிரீத் கவுர். பாரா ஒலிம்பிக் போட்டியில், ஈட்டி எறியும் பிரிவில் தங்கம் வென்ற, தேவேந்திர ஜாஜாரியா, ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சர்தார் சிங் ஆகியோர், ராஜிவ்காந்தி கேல்ரத்னா விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
புபேந்திர சிங் (தடகளம்), சையத் ஷாகித் ஹகீம் (கால்பந்து), சுமராய் டீடே (ஹாக்கி) ஆகியோருக்கு, வாழ்நாள் சாதனைக்கான தயான்சந்த் விருது, வழங்கப்பட உள்ளது.. சிறந்த பயிற்சியாளருக்கான துரோணாசாரியார் விருது ஏழு பேருக்கு வழங்கப்பட உள்ளது. மறைந்த டாக்டர் ஆர். காந்தி (தடகளம்), ஹீரா நந்த் கடாரியா (கபடி), சி.எஸ்.எஸ்.வி. பிரசாத் (பாட்மின்டன்), பிரிஜ் பூஷண் மொகந்தி (குத்துச்சண்டை), பி.ஏ. ரபேல் (ஹாக்கி), சஞ்சய் சக்ரவர்த்தி (துப்பாக்கி சுடுதல்), ரோஷன் லால் (மல்யுத்தம்) ஆகியோர் இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தேசிய விளையாட்டு தினத்தையொட்டி, வரும், 29ம் தேதி நடக்கும் விழாவில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், விருதுகளை வழங்குகிறார். பதக்கத்துடன், ராஜிவ்காந்தி கேல்ரத்னா விருதுடன், ரூ.7.5 லட்சம், துரோணாசாரியார், தயான்சந்த் மற்றும் அர்ஜூனா விருதுடன், ரூ 5 லட்சம் ரொக்கம் பரிசாக வழங்கப்படும்.
விருது பெறுவோர் பட்டியல்:
ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருது - தேவேந்திர ஜாஜாரியா (பாரா தடகளம்) சர்தார் சிங் (ஹாக்கி) தயான்சந்த் விருது- புபேந்திர சிங் (தடகளம்) சையத் ஷாகித் ஹகீம் (கால்பந்து) சுமராய் டீடே (ஹாக்கி) துரோணாசாரியார் விருது மறைந்த டாக்டர் ஆர். காந்தி (தடகளம்) ஹீரா நந்த் கடாரியா (கபடி) சி.எஸ்.எஸ்.வி. பிரசாத் (பாட்மின்டன்) பிரிஜ் பூஷண் மொகந்தி (குத்துச்சண்டை) பி.ஏ. ரபேல் (ஹாக்கி) சஞ்சய் சக்ரவர்த்தி (துப்பாக்கி சுடுதல்) ரோஷன் லால் (மல்யுத்தம்) அர்ஜூனா விருது வி.ஜே. சுரேகா (வில்வித்தை) குஷ்பிர் கவுர் (தடகளம்) அரோக்கிய ராஜிவ் (தடகளம்) பிரசாந்தி சிங் (கூடைப்பந்து) லைஷ்ராம் தேபேந்த்ரோ சிங் (குத்துச்சண்டை) சதேஸ்வர் புஜாரா (கிரிக்கெட்) ஹர்மன்பிரீத் கவுர் (கிரிக்கெட்) ஒய்னம் பெம்பெம் தேவி (கால்பந்து) எஸ்.எஸ்.பி., சவ்ராசியா (கோல்ப்) எஸ்.வி. சுனில் (ஹாக்கி) ஜஸ்விர் சிங் (கபடி) பி..என். பிரகாஷ் (துப்பாக்கிச் சுடுதல்) ஓ. அமல்ராஜ் (டேபிள் டென்னிஸ்) சாகேத் மைனேனி (டென்னிஸ்) சத்யவிரத காடியான்(மல்யுத்தம்) மாரியப்பன் (பாரா தடகளம்) வருன் சிங் பட்டி (பாரா தடகளம்)