அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவது அரசின் கடமை
அரசு ஊழியர் சங்கங்களை உடனடியாக அழைத்து பேசி, அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதுதான் ஒரு பொறுப்புள்ள அரசின் கடமை என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
10 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் தங்களின் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தி வரும் தொடர் போராட்டத்தை அ.தி.மு.க. அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதற்கும், அந்தப் போராட்டத்தை காவல்துறை மூலம் அடக்கிவிடலாம் என்று நினைப்பதற்கும், தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் திடீரென்று போராட்டம் நடத்திவிடவில்லை. முறைப்படி முன்கூட்டியே அரசுக்கு இந்த வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து நோட்டீஸ் அனுப்பி, அதன் அடிப்படையில் ஆகஸ்டு 5–ந் தேதி மாபெரும் பேரணியை அரசு ஊழியர்கள் சென்னை மாநகரத்தில் நடத்தினார்கள்.
இந்த நிலையில், கடந்த ஆகஸ்டு 16–ந் தேதி தங்கள் கோரிக்கைகள் குறித்து பிரசார இயக்கத்தை நடத்தி, அரசின் கவனத்திற்கு கோரிக்கைகளின் முக்கியத்துவத்தை எடுத்துச் சென்றுள்ளார்கள். அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண கிஞ்சித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
அரசு உருவாக்கிய அசாதாரண சூழ்நிலையால் 22–ந் தேதி (நாளை) மாநிலம் முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அப்படி வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது என்றும், தற்காலிக பணியாளர்கள் வேலை இழக்க நேரிடும் என்றும் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மிரட்டியிருப்பது வேதனைக்குரியது.
அரசு நிர்வாகத்தில் உள்ள அரசு ஊழியர்களின் தலைவராகவும், அவர்களின் நலன் குறித்து கனிவுடன் பரிசீலித்து அரசுக்கு தெரிவித்து நிறைவேற்ற வேண்டிய பொறுப்பில் இருப்பவருமான ஒரு தலைமைச் செயலாளர், போராடும் அரசு ஊழியர்களுக்கு மிரட்டல் விடுப்பதும், எச்சரிக்கை செய்வதும் ஜனநாயக விரோத செயல் மட்டுமல்ல, சிறந்த நிர்வாக நடைமுறைக்கு சற்றும் உகந்த செயல் அல்ல.
இந்த போராட்டம் முடிந்ததும், செப்டம்பர் 7–ந் தேதி தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் காலவரையற்ற போராட்டத்தை நடத்தப்போவதாகவும் அரசு ஊழியர்கள் அறிவித்துள்ளார்கள். அப்படியொரு போராட்டத்தை நடத்தும் நிலைக்கு அரசு ஊழியர்களை தள்ளாமல், ஜாக்டோ, ஜியோ உள்ளிட்ட அரசு ஊழியர் சங்கங்களை உடனடியாக அழைத்துப் பேசி, அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதுதான் ஒரு பொறுப்புள்ள அரசின் கடமை. என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.