பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரனை இடம்மாற்றம் செய்ய தடை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி!
பள்ளிக்கல்வித்துறை செயலாளராக உள்ள உதயச்சந்திரனை தமிழக அரசு இடமாற்றம் செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. நேர்மையான அதிகாரியான உதயச்சந்திரனை இடமாற்றம் செய்ய பல்வேறு தரப்பினரும் ஆசிரியர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்நிலையில் இதுதொடர்பாக ராமலிங்கம் என்பவர் பொது நல வழக்கு தாக்கல் செய்யதார். அதில் பாடத்திட்டத்தை மாற்றும் குழுவை நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் இயக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரனை இடம்மாற்றம் செய்ய சென்னை ஹைகோர்ட் இடைக்கால தடை விதித்தது. மேலும் பாடத்திட்டத்தை மாற்றும் குழுவில் உள்ள யாரையும் பணியிட மாற்றம் செய்யக்கூடாது என்றும் சென்னை ஹைகோர்ட் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. பாடத்திட்டத்தை மாற்றியமைக்கும் வரை யாரையும் பணியிட மாற்றம் செய்யக்கூடாது என்றும் சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் பாடத்திட்டத்தை மாற்றும் குழு இதுவரை மேற்கொண்டுள்ள பணிகள் என்ன என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.