அரசு அலுவலகங்களில் மட்டும் இனி ஆதார் மையங்கள்
'நாடு முழுதும், செப்டம்பர் முதல், அரசு அலுவலகங்களில் மட்டுமே ஆதார் மையங்கள் செயல்படும்' என அறிவிக்கப்பட்டுள்ளது. மானிய உதவி, வங்கி கணக்கு என அனைத்திற்கும், தற்போது, 'ஆதார்' எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, அனைவருக்கும் முழுமையாக ஆதார் எண் வழங்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. இதற்காக, அரசு நிறுவனங்கள் மட்டுமல்லாமல், தனியார் நிறுவனங்களும், ஆதார் தகவல்களை பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளன.ஆனால், தனியார் ஆதார் மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது; மேலும் பல குளறுபடிகள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.எனவே, ஆதார் வழங்கும் பணியை, அரசு மற்றும் அது சார்ந்த நிறுவனங்களிடம் மட்டுமே, வழங்குவது குறித்து ஆதார் வழங்கும் அமைப்பான இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையம் முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக, அதன், தலைமை செயல் அதிகாரி அஜய் பூஷண், மாநில அரசுகளுக்கு
கடிதம் எழுதியுள்ளார். 'செப்டம்பர் முதல் தேவைப்பட்டால், தனியார் ஆதார் ஏஜன்சிகளும், அரசு அலுவலகங்களில், அரசு அதிகாரிகளின் நேரடி கட்டுப்பாட்டில் மட்டுமே செயல்பட வேண்டும்' என அறிவுறுத்தப்பட்டுள்ளது.