புது ஓய்வூதிய திட்டத்தில் கடன் கிடையாது கைவிரித்தது தமிழக நிதித்துறை
'பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பிடித்தம் செய்யப்பட்ட தொகை இருந்தும், அரசு ஊழியர்களுக்கு கடன் வழங்க முடியாது' என, தமிழக நிதித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், 2003-க்கு பின் அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு, ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு, பங்களிப்பு ஓய்வூதியம் அமல்படுத்தப்பட்டது.
ஊழியர் சம்பளத்தில், 10 சதவீதம் பிடித்தம், அரசின் பங்களிப்பாக, 10 சதவீதம் சேர்த்து, அத்தொகை முழுவதும் தனி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
சில துறைகளில் மட்டும் பிடித்தம் செய்த தொகை, எட்டு சதவீத வட்டியுடன் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது; அவர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது.
இது குறித்து, காரைக்குடியை சேர்ந்த செல்வம், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விபரம் கேட்டார். அதற்கு, நிதித்துறை பொது தகவல் தொகுப்பு மையம் அளித்துள்ள பதில் விபரம்:
இத்திட்டத்தின் கீழ், பணியாளர் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகை, அரசு பங்குத்தொகை சேர்த்து அரசு நிர்ணயிக்கும் வட்டியுடன் திரும்ப வழங்கப்படும். இத்திட்ட நிதி, நிரந்தர அரசு கணக்கில் வரவு வைக்கப்படவில்லை; தற்காலிக கணக்கில் தான் வரவு வைக்கப்பட்டுள்ளது.
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ், 2015 - -16 வரை பணி அமர்த்தப்பட்டவர்கள், 4.54 லட்சம் பேர். புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத் தில், 2003 ஏப்., 1 முதல் தற் போது வரை பணியாளர்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகை, 5,114 கோடி ரூபாய். அரசு பங்கு தொகையாக, அதே அளவு தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. மொத்தம், 10,222 கோடி ரூபாய் உள்ளது.
இதுவரை பணி ஓய்வு, இறப்பு போன்றவற்றால் இத்திட்டத்தில் பயன் பெற்றவர்கள், 1,873 பேர்; இவர்களுக்கு தொடர் ஓய்வூதியம் கிடையாது. மேலும், 10 ஆண்டுக்கு மேல் பணி புரிந்தவர்களுக்கு, இருப்பு தொகையில் கடன் வழங்க இயலாது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து செல்வம் கூறியதாவது:
பத்து ஆண்டுகளுக்கு மேல் பணி புரிந்தவர்களுக்கு பிடித்தம் செய்யப்பட்ட தொகையில், 25 சதவீதம் கடன் வழங்க, ஏற்கனவே சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால், தற்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கடன் வழங்க இயலாது என்றும், எவ்வித அரசாணையும் வெளியிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யும் கோரிக்கைக்காக குழு அமைக்கப்பட்டு, அரசு அதை கிடப்பில் போட்டுள்ளது. ஓய்வு பெறும் ஊழியருக்கு பிடித்தம் செய்யப்பட்ட தொகையை திரும்பப் பெறும் வழிமுறைகளை, அரசு தெரிவிக்கவில்லை.