ஆதார் எண் இல்லாவிட்டாலும் கல்வி உதவித்தொகை உண்டு
'ஆதார் எண் இல்லாவிட்டாலும், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் சார்பில், ஒன்றாம் வகுப்பு முதல், ஆராய்ச்சி படிப்பு வரை, மாணவர்களுக்கு உதவித்தொகை திட்டங்கள், பல அரசு துறைகள் மூலம் செயல்படுத்தப்படுகின்றன. பள்ளிகள் மூலம், கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.
இதில், முறைகேடுகளை தடுக்கவும், போலி ஆவணங்கள் பெயரில், கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதை தவிர்க்கவும், மாணவர்களின் ஆதார் எண்ணை பதியும் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆதார் எண்ணை பதிந்தால் மட்டுமே, கல்வி உதவித்தொகை கிடைக்கும் என, மத்திய அரசு அறிவித்தது.
அனைத்து மாணவர்களுக்கும், இன்னும் ஆதார் எண் வழங்கப்படாததால், பல லட்சம் மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது, ஆதார் அட்டை இல்லாவிட்டாலும், கல்வி உதவித்தொகை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., கல்லுாரிகளுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், 'ஆதார் எண் இல்லை என, மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை மறுக்கக்கூடாது.
'ஆதார் எண் இல்லா தோர், முகவரி அடையாள சான்றுடன், வங்கிக் கணக்கு எண்ணை பதிவு செய்தால், சம்பந்தப்பட்ட துறைகள் உதவித்தொகை வழங்கும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.