நவீன ராக்கெட் என்ஜின்: இஸ்ரோ சோதனை வெற்றி
காற்று மண்டலத்தில் இருக்கும் ஆக்ஸிஜனை உறிஞ்சி திரவ ஹைட்ரஜன் ஆற்றலின் மூலம் பறக்கும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) நவீன ராக்கெட் என்ஜின் பரிசோதனை 28-08-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று வெற்றிகரமாக நடைபெற்றது.
"ஸ்கிரேம்ஜெட்' என அழைக்கப்படும் இந்த ராக்கெட் என்ஜின் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியளவில் விண்ணில் ஏவி இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக பரிசோதித்தனர்.
எடை குறைந்த அதேநேரத்தில் திறன்மிக்க இந்த நவீன ராக்கெட் என்ஜின் பரிசோதனை வெற்றிகரமாக முடிந்தது, இந்திய விண்வெளி ஆராய்ச்சில் ஒரு மைல் கல் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இஸ்ரோவின் "ஸ்கிரேம் ஜெட்' என்ஜின் சோதனை வெற்றி குறித்து திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குநர் கே.சிவன் செய்தியாளர்களிடம் விளக்கினார்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதுதொடர்பாக மேலும் அவர் கூறியதாவது:
பொதுவாக ராக்கெட்டைச் செலுத்தும்போது அதை இயக்குவதற்குத் தேவையான எரிபொருள், ஆக்ஸிஜன் ஆகியவை ராக்கெட்டுடனே அனுப்பப்படும்.
அவ்வாறு ராக்கெட்டில் உள்ள என்ஜினை இயக்குவதற்கான ஆக்ஸிஜனை தரையிலுள்ள விண்வெளி மையத்திலிருந்து அனுப்பாமல், தேவையான ஆக்ஸிஜனை வாயு மண்டலத்திலிருந்து எடுத்துக்கொள்ள வைப்பதுதான் இந்த "ஸ்கிரேம் ஜெட்' (சூப்பர்சானிக் கம்பர்சன் ரேம் ஜெட்) என்ஜினின் சிறப்பாகும்.
இதன் மூலம் ராக்கெட்டின் எடை 400 கிலோவிலிருந்து பாதியாகக் குறைந்துவிடும் என்பதோடு திறனும் மேம்படும். உற்பத்திச் செலவும் குறையும்.
இயக்கியது எப்படி?: ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்ட ராக்கெட்டுகளின் பக்கவாட்டில் இரண்டு "ஸ்கிரேம் ஜெட்' என்ஜின்கள் பொருத்தப்பட்டு, இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
அதிக வெப்பத்ததைத் தாங்கக்கூடிய மிகவும் கடினமான "இன்கோனெல்' என்ற உலோகத்தால் இந்த என்ஜின் உருவாக்கப்பட்டுள்ளது.
மிகப் பெரிய சாதனை: இதுவரை அமெரிக்கா, சீனா போன்ற ஒருசில நாடுகள் மட்டுமே இந்தத் தொழில்நுட்பச் சோதனையைச் செய்துள்ளன. அந்த வரிசையில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது.
இந்தத் தொழில்நுட்பத்தை அவ்வளவு எளிதாக எந்த நாடும் வெளியிட்டுவிடாது. அந்த வகையில், இது இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் மிகப் பெரிய சாதனையாகும் என்றார் அவர்.
பயன் என்ன?
இந்த என்ஜின் சோதனை என்பது, முதல் கட்டம்தான். இது முழுமையான விண்கலமாக மாற்ற 10 ஆண்டுகளுக்கு மேலாகும். இருந்தபோதும், மீண்டும் பயன்படுத்தக்கூடிய விண்வெளி ராக்கெட்டுகள், இப்போது பரவலாகப் பேசப்பட்டு வரும் அதிவேக விண்வெளி விமானம் ஆகியவற்றிலும் இந்த என்ஜினைப் பயன்படுத்த முடியும்.
அவ்வாறு விண்வெளி விமானத்தில் இந்த என்ஜினைப் பயன்படுத்தும்போது, இப்போது இந்தியாவிலிருந்து 18 மணி நேரம் பயணித்து செல்லக் கூடிய அமெரிக்காவுக்கு, வெறும் ஒரு மணி நேரத்தில் சென்றுவிட முடியும் என்றார் கே.சிவன்.