இன்று இளைஞர் தினம் (12-08-2016) இலக்கை நிர்ணயிக்கட்டும் உங்கள் மனம்
போகும் குதிரையை நிறுத்தி கேட்டுப்பார் போவது எங்கே என்று; புறம் திருப்பி அழகு காட்டும்; கேள்வியே அபத்தமென்று...
இலக்கில்லா மனிதர் பெரியோர். இளைஞனாக இருந்த போது இரும்புக்குதிரைகளில் பாலகுமாரன் எழுதியது. பெரியோராக அடையாளம் காணப்பட்ட பலரும் , இலக்குகளைத் தாண்டியோர் தான், அதனால் இன்றைய இளைய தலைமுறை, எது இலக்கு எது திசை என்றே தெரியாமல் தடுமாறுகிறது. என்பது கதையல்ல நிஜம்.
இளைஞர் ஆண்டு:
இளைய சக்தியை நெறி முறைப்படுத்தி வெற்றியின் திசையில் திருப்பி விட அழைக்கிறது. உலக இளைஞர் தினம். ஆம் இன்று தான் உலக இளைஞர் தினம், ஐக்கிய நாடுகள் சபை, 1985ம் ஆண்டை இளைஞர் ஆண்டாக அறிவித்தது. கல்வி வளர்ச்சி , வேலை வாய்ப்பு, பொழுதுபோக்கு, சுகாதாரம் இளம்பெண்கள் முன்னேற்றம் தகவல் தொடர்பு தொழில் நுட்ப முன்னேற்றம், சுற்றுச்மசூழல் பாதுகாப்பு, வறுமை ஒழிப்பு, போதை பழக்கத்தை ஒழித்தல், பாலின வேறுபாடு களைதல், தீவிரவாதத்தை தடுத்தல் உள்ளிட்ட சமூகப் பணிகளில் இளைஞர்களை ஈடுபடுத்துவதே இதன் குறிக்கோளாக வரையறுக்கப்பட்டது.
மில்லேனியம் ஆண்டிலிருந்து...:
அதன்பின் 1998 வரை சத்தமே இல்லை. அந்த ஆண்டில் தான் உலக இளைஞர் தினம் கொண்டாடப்பட வேண்டுமென்ற கோஷம் ஒலிக்கத் துவங்கியது. அடுத்த ஆண்டில் ஆக.,12 என்று நிர்ணயித்து மில்லேனிம் ஆண்டிலிருந்து இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
ஆனால் நம் நாட்டிற்கென தனியாக தேசிய இளைஞர் தினமாக ஜன., 12 கொண்டாடப்படுகிறது. அது இளைய இதயங்களை வென்ற வி வேகானந்தரின் பிறந்த நாள்.
உலக இளைஞர் தினம், வெறும் கொண்டாட்டமாக நடத்தப்படுவதில்லை. ஒவ்வொரு ஆண்டும், ஒரு குறிக்கோளை வகுத்து, அதை அடுத்த ஆண்டு வரை நகர்த்திச் செல்ல தூண்டுகிறது. ஐ.நா சபை,
யார் இளைஞர்?:
நம்மூரில் தான் 50 வயதைத் தாண்டியும் இளைஞரணி செயலாளராக இருக்கலாம் . ஆனால் 15 முதல் 24 வயதுக்குட்பட்டோரையே இளைஞர்களாக ஐ.நா சபை கணக்கிடுகிறது. 2010-ம் ஆண்டு புள்ளி விபரத்தின் அடிப்படையில் உலகின் மொத்த மக்கள் தொகையில் 18 சதவீதம்பேர் 14 முதல் 24 வயதுக்குட்பட்டோராக உள்ளனர். இதில் 87 சதவீதம் பேர் வளரும் நாடுகளை சேர்ந்தோர் என்பது குறிப்பிடத்தக்கது.
இளைஞர்களின் வாழ்வுரிமைகளை காப்பது, அவர்களுக்கான கல்வி, உடல் நலம், வேலை வாய்ப்பு, நிதி மற்றும் பொது வாழ்வில் அவர்களின் பங்களிப்பை மேம்படுத்தல் ஆகிய வையே, இன்றைய இளைஞர் தின கொண்டாட்டத்தின் குறிக்கோள் ஆகும். இந்த ஆண்டின் இளைஞர் தின கொள்ளையாக, 2030 வரை,இளைஞர்களின் நீடித்த நிலைத்த முன்னேற்றம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பொருளாதாரம், சமூகம், சுற்றுச்சூழல் ஆகிய துறைகளில் இளைஞரின் பங்கை அதிகப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்புகளை ஊக்கப்படுத்துதல் இதில் முதலிடத்தில் உள்ளது.
விண்ணப்பிக்கலாம்:
குப்பை, மாசை குறைப்பது, தூய்மையான குடி நீர் கிடைக்கச் செய்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவது, உடல் மன நலம் பேணுதலில் அக்கறையை ஏற்படுத்துவது, தரமான கல்வியை நோக்கிய சிந்தனையை வளர்ப்பது, பாலின சமத்துவத்தை போதிப்பது என இளைஞர்களின் வாழ்வில் நீடித்த நிலைக்கு வளர்ச்சியை ஏற்படுத்த அரசு தன்னார்வ அமைப்புகள் ஊக்கப்படுத்த வேண்டுமென்கிறது. இளைஞர் தன கொள்கை. இளைஞர்களின் மன மாற்றத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை குழுவாகவோ, அமைப்பாகவோ தொடர்ந்து செய்தல் வேண்டும்.
அவ்வாறு செய்யும் நல்ல நிகழ்ச்சிகளை youth@run.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால் சிறந்தவை தெரிவு செய்யப்பட்டு அவை ஐ.நா., சபையின் வலை தளத்தில் வெளியிடப்படும். ஐ.நா.,சபைக்காக இல்லை.. அடுத்த தலைமுறைக்காக ஏதாவது செய்யலாமே.