பிரதமருக்கே அறிவுரை கூறிய 8 ம் வகுப்பு மாணவன்
மத்திய பிரதேச மாநிலம், கந்த்வாவில், சுதந்திர போராட்ட வீரர் சந்திரசேகர ஆசாத் பிறந்த ஊரான பாப்ரா கிராமத்தில் பேரணி ஒன்றை துவக்கி வைக்க பிரதமர் செல்ல உள்ளார்.
இதனையடுத்து, பிரதமரின் பேரணியில் பங்கேற்க அப்பகுதியில் உள்ள பள்ளி பேருந்துகளை அனுப்பி வைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதனையடுத்து அங்குள்ள பள்ளி ஒன்றில் 8 ம் வகுப்பு படிக்கும் தேவனாஷ் ஜெயின் என்ற மாணவனிடம் ஆசிரியை, பள்ளி பேருந்துகள் பிரதமரின் பேரணிக்கு செல்வதால், செவ்வாய் மற்றும் புதன் பள்ளி விடுமுறை எனக்கூறினார். இதனால் அதிருப்தியடைந்த அந்த மாணவன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினான். இதனையடுத்து பள்ளி பேருந்தை அனுப்பி வைக்க வேண்டும் என்ற உத்தரவை மாவட்ட நிர்வாகம் திரும்ப பெறப்பட்டுள்ளது.
தேவனாஷ் தனது கடிதத்தில், "பள்ளி வகுப்புகளை விட உங்களது கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததா? அமெரிக்காவில் உங்களின் பேச்சுக்களை நான் கேட்டுள்ளேன். ஆனால் அவர்கள் இந்த கூட்டத்திற்கு பள்ளி பேருந்தில் வரவில்லை. நான் உங்களின் தீவிர ரசிகன். உங்களின் மன் கி பாத் நிகழ்ச்சியை தவறாமல் கேட்பேன். இது தொடர்பாக சக மாணவர்களுடன் விவாதித்துள்ளேன். அவர்கள் கிண்டல் செய்தால் சண்டை போட்டுள்ளேன். ம.பி., முதல்வர் சிவராஜ் மாமாவிடம், பள்ளி பேருந்துகளை பேரணிக்கு அனுமதிக்க வேண்டாம் என கூறுங்கள். நீங்கள் மற்ற கட்சி தலைவர்கள் போல் இல்லை. எங்களது கல்வி மற்றும் எதிர்காலத்தில் கவனம் கொண்டவர். எனது கோரிக்கையை நீங்கள் ஏற்றுக்கொண்டால், மோடியின் கூட்டத்திற்கு மக்கள் தாங்களாக வந்தார்கள். அழைத்து வரப்படவில்லை என பெருமை கொள்வேன்" எனக்கூறியுள்ளார்.