கனவு நாயகன் கலாம் அவர்களுக்கு முதலாண்டு நினைவஞ்சலி
1954: திருச்சி புனித ஜோசப் கல்லுாரியில் பி.எஸ்சி., இயற்பியல் பட்டம் பெற்றார்.
1960: சென்னை எம்.ஐ.டி., கல்லுாரியில் 'ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்' பட்டம் பெற்றார்.
1960: டி.ஆர்.டி.ஓ.,வில் விஞ்ஞானியாக பணியில் சேர்ந்தார்.
1969: இஸ்ரோ நிறுவனத்துக்கு மாற்றப்பட்டார்.
1980: கலாம் தலைமையிலான விஞ்ஞானிகள் ரோகிணி செயற்கைக்கோளை,
'எஸ்.எல்.வி.,- 3' ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவினர். இதன் மூலம்
உலகின் பார்வையை இந்தியா மீது திருப்பினார்.
1980-90: ஒருங்கிணைந்த ஏவுகணை தயாரிப்பு திட்டத்தின் கீழ், அக்னி மற்றும் பிருத்வி ஏவுகணைகள் வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.
1981: பத்ம பூஷன் விருது பெற்றார்.
1990: பத்ம விபூஷன் விருது பெற்றார்.
1992 - 99: டி.ஆர்.டி.ஓ., அமைப்பின் செயலராகவும், பிரதமரின் தலைமை பாதுகாப்பு ஆலோசகராகவும் பணியாற்றினார்.
1997: நாட்டின் உயரிய விருதான 'பாரத ரத்னா' விருது பெற்றார்.
1998: பொக்ரான் அணுஆயுத சோதனையை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார். இதன் மூலம் அணுஆயுத நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது.
1999: அப்துல் கலாம் எழுதிய அவரது சுயசரிதை புத்தகம் 'அக்னி சிறகுகள்'
ஆங்கிலத்தில் வெளியானது.
1999 - 2001 : பிரதமர் வாஜ்பாயின் முதன்மை அறிவியல் ஆலோசகராக பணியாற்றினார்.
2002: நாட்டின் 11வது ஜனாதிபதியாக பதவியேற்றார்.
2007: ஜனாதிபதி பதவிக்காலத்தை நிறைவு செய்தார்.
2007: திருவனந்தபுரத்தில் இஸ்ரோவால், தொடங்கப்பட்ட இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியின் முதல் வேந்தராக பொறுப்பேற்றார்.
2007-15 : ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய பின், பல்வேறு பல்கலைக்கழங்களில் கவுரவ பேராசிரியராக பணியாற்றினார்.
2015: மேகாலயாவில் மறைந்தார்.
பொன்மொழிகள்
கனவு காணுங்கள் அவற்றை நனவாக்க கடுமையாக உழைக்க வேண்டும். என்னால் முடியும்... நம்மால் முடியும்... இந்தியாவால் முடியும் என்ற மந்திரத்தை சொல்லிக்கொண்டே இருங்கள்.
முதல் வெற்றியுடன் ஓய்வு எடுத்து விடாதீர். ஏனெனில் இரண்டாவது முயற்சியில்
தோல்வி அடைந்தால், முதல் வெற்றி அதிர்ஷ்டத்தால் வந்தது என விமர்சிப்பர்.
மழை வந்தால் பறவைகள் எல்லாம் பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் அடையும். ஆனால் கழுகு மட்டும் வித்தியாசமாக சிந்தித்து, மேகத்துக்கு மேலே பறந்து மழையில் இருந்து தப்பிக்கும்.
அனைவருக்கும் ஒரே மாதிரியான திறமை கிடையாது. ஆனால் திறமையை வளர்த்துக் கொள்ள ஒரே மாதிரியான வாய்ப்பு கிடைக்கிறது.
வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஒரு வழி. அடுத்தவர்களின் வெற்றியை உங்களுடைய வெற்றியைப் போலக் கொண்டாட கற்றுக் கொள்ளுங்கள்.
நீங்கள் உறங்கும்போது வருவதல்ல கனவு. உங்களை உறங்கவிடாமல் செய்வதே கனவு.
உங்களுக்கு சிறகுகள் உள்ளன. தவழ்ந்து செல்லாதீர்கள். அதைக் கொண்டு, மேலே மேலே பறந்து செல்லுங்கள்.
உன் ரேகையைப் பார்த்து எதிர்காலத்தை நிர்ணயித்து விடாதே. ஏனெனில் கையே இல்லாதவனுக்கும் எதிர்காலம் உள்ளது.
ஜனாதிபதி, விஞ்ஞானி என பன்முக மனிதராக இருந்த அப்துல் கலாம், தேசப்பற்று மிக்கவராக இருந்தார். இந்தியாவின் மிகப் பெரும் விஞ்ஞானி விக்ரம் சாராபாயை தனது 'ரோல் மாடலாக' கொண்டு செயல்பட்டார்.
கலாமுக்கு மரியாதை
கலாம் மறைவுக்குப் பின் பல்வேறு மாநில அரசுகளும், அவரது பெயரை சூட்டி மரியாதை அளித்துள்ளன.
டில்லியில் உள்ள அவுரங்கசீப் சாலை, அப்துல் கலாம் சாலை என பெயர் மாற்றம்.
ஒடிசாவில் உள்ள ஏவுகணை சோதனை மையமான வீலர் தீவுக்கு, அப்துல் கலாம்
தீவு என பெயர் மாற்றப்பட்டது.
கேரள தொழில்நுட்ப பல்கலைக்கழகம், அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என பெயர் சூட்டியுள்ளது.
உத்தர பிரதேசத்தில் செயல்படும் உ.பி., தொழில்நுட்ப பல்கலைக்கழகம், அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என பெயர் மாற்றம் செய்துள்ளது.
டில்லி அரசு 'மாணவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும் கல்விக்கடன்' திட்டத்துக்கு, அப்துல் கலாம் பெயரை சூட்டியுள்ளது.
தமிழக அரசு அப்துல் கலாம் பிறந்த தினத்தை 'இளைஞர் எழுச்சி தினமாக' அறிவித்தது. மேலும் அறிவியல் துறையில் சாதிப்பவர்களுக்கு அவரது பெயரில் விருது ஒன்றையும் வழங்குகிறது.
ஐதராபாத்தில் உள்ள ஏவுகணை மையத்துக்கு, அப்துல் கலாம் பெயரை மத்திய அரசு
இன்று சூட்டுகிறது.
பீகாரில் உள்ள கிஷன்கஞ்ச் வேளாண்மை கல்லுாரிக்கு, அப்துல் கலாம் பெயர் சூட்டப்பட்டது.
புதுவை அறிவியல் மையம் மற்றும் கோளரங்கத்திற்கு அப்துல் கலாம் பெயர் சூட்டப்பட்டது.
கடைசி நிமிடத்திலும்
கலாம் தன் கடைசி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கவுகாத்தியில் இருந்து ஷில்லாங்கிற்கு காரில் பயணம். மேற்கொண்டார். அப்போது அவரது பாதுகாப்பிற்காக, பாதுகாப்பு வீரர்கள் நின்றபடி பின்தொடர்ந்து வந்தனர்.
அதைப்பார்த்த கலாம், அவரை தயவு செய்து அமரச் செய்யுங்கள் என்றார். இது வழக்கமான பாதுகாப்பு நடைமுறைதான் என எடுத்துச் சொல்லியும் கலாம், கேட்க வில்லை. கடைசியில் அவர், நான் அந்த பாதுகாவலரை சந்திக்க வேண்டும் என்றார்.
ஐ.ஐ.எம்., சென்றதும் அந்த பாதுகாப்பு வீரரை சந்தித்த அப்துல் கலாம், 'நன்றி இளைஞனே. என்னால் தானே உனக்கு இந்த கஷ்டம். சோர்ந்து விட்டாயா? எதாவது சாப்பிடுகிறாயா? எனக்காக
1 மணி நேரம் நின்று கொண்டு வந்தாயே நன்றி இளைஞனே என்றார். அந்த பாதுகாவலருக்கு பேச வார்த்தை வரவில்லை.
'சார்... உங்களுக்காக நான் 1 மணி நேரம் அல்ல... 6 மணி நேரம் கூட நின்று கொண்டே வருவேன் என்று பதிலளித்தான். கலாமின் இப்படிப்பட்ட மனிதநேய செயல்களால் தான் அவர், இன்றும் மக்களால் விரும்பப்படுகிறார்.