அரசு ஊழியர் வங்கி கணக்குகள் கண்காணிக்கப்படுகின்றன!
ஊழல், லஞ்சத்தை தடுக்கும் வகையில், மத்திய அரசு ஊழியர்களின் சந்தேகத்துக்குரிய வங்கி கணக்குகளை, சி.வி.சி., எனப்படும், மத்திய கண்காணிப்பு ஆணையம், ஆராய்ந்து வருகிறது.
நாடு முழுவதும் நடக்கும் வங்கி பரிவர்த்தனைகளை, நிதி புலனாய்வு பிரிவு சேகரித்து ஆராய்ந்து வருகிறது. சந்தேகத்துக்குரிய பரிவர்த்தனை அறிக்கையை, இந்த அமைப்பு தயாரிக்கிறது. மேலும், 10 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட அனைத்து பரிவர்த்தனைகளும் கண்காணிக்கப்படுகின்றன. இந்த அறிக்கையை, மத்திய அமலாக்கத் துறை, சி.பி.ஐ., ரிசர்வ் வங்கி, 'செபி' எனப்படும், பங்கு பரிவர்த்தனை கட்டுப்பாட்டு அமைப்பு, தேசிய புலனாய்வு அமைப்பு, மத்திய பொருளாதார நுண்ணறிவு பிரிவு, அனைத்து மாநில தலைமைச் செயலர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்படுகிறது. கறுப்புப் பணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள, சிறப்பு விசாரணை குழுவுக்கும் இந்தத் தகவல்கள் அளிக்கப்படுகின்றன.
மத்திய கண்காணிப்பு ஆணையராக, கே.வி.சவுத்ரி, கடந்த ஆண்டு பதவியேற்ற பின், இந்தத் தகவல்களை பெறுவதற்கான முயற்சியில் இறங்கினார். அதன்படி, மத்திய அரசின் ஒப்புதலுடன், தற்போது, சந்தேகத்துக்குரிய பரிவர்த்தனை அறிக்கை, சி.வி.சி.,க்கும் கிடைக்கிறது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட பரிவர்த்தனைகளை சி.வி.சி., ஆராயத் துவங்கி உள்ளது.