பள்ளிக் கல்வித் துறைக்குரூ. 24,130 கோடி ஒதுக்கீடு
பள்ளி கல்வித்துறைக்கு என திருத்திய வரவு செலவு திட்டத்தின் கீழ் நிகழாண்டில் ரூ.24,130 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.3,193.50 கோடி அதிகமாகும்.
இது குறித்து நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பள்ளிகளைத் தரம் உயர்த்துதல்:
தமிழக அரசு சார்பில் தரமான கல்வி வழங்கும் வகையில், ஆசிரியர் -மாணவர் விகிதம் தொடக்கப் பள்ளிகளில் 1:25, நடுநிலைப்பள்ளிகளில் 1: 24, உயர்நிலைப்பள்ளிகளில் 1:26, மேல்நிலைப்பள்ளிகளில் 1:37 ஆகவும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இது தேசிய விகிதத்தைவிட அதிகமாகும்.
புவியியல் தகவல் முறைப்படி தயாரிக்கப்பட்ட பள்ளி இருப்பிட வரைபட செயலி உதவியுடன் பள்ளிகள் தொடங்குவது, பள்ளிகளின் தரம் உயர்த்துதல் போன்ற நடவடிக்கைகளால் குழந்தைகள் அனைவரும் பள்ளிகளில் சேர்க்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்விச்சட்ட விதிகளின்படி, பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த 2,31,404 குழந்தைகள், இதுவரை தனியார் பள்ளிகளில் சேர்க்கை பெற்றுள்ளனர். நிகழாண்டில் 86,199 குழந்தைகள் தனியார் பள்ளிகளில் சேர்க்கை பெற்றுள்ளனர். இதற்காக ரூ.125.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கழிப்பறை வசதிகள்:
கடந்த ஆண்டு கழிப்பறைகள் பராமரிப்புக்காக உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் ரூ.57.63 கோடி வழங்கப்பட்டன. இந்தத் திட்டம் மத்திய அரசால் பாராட்டப்பட்டதுடன், பிற மாநிலங்களும் இதை முன்மாதிரியாகப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இந்தத் திட்டம் நிகழாண்டிலும் தொடர்கிறது. அத்துடன் நடப்பாண்டில் ரூ.59.25 கோடியில் தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் 4,339 கழிப்பறை வசதிகள் அமைக்கப்படும். நபார்டு வங்கிக்கடன் உதவியுடன் வகுப்பறைகள், கழிப்பறைகள், குடிநீர் வசதிகள் ஏற்படுத்த ரூ. 333.61 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எஸ்எஸ்ஏ-வுக்கு ரூ. 2,329.15 கோடி:
அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்எஸ்ஏ), அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம் (ஆர்எம்எஸ்ஏ) ஆகியவற்றுக்கு 2015-16-ஆம் ஆண்டுக்கான பங்குத் தொகை ரூ.848 கோடி வரப்பெற்றது. எனினும் இந்தத் திட்டங்கள் திறம்பட செயல்படுவதை உறுதி செய்ய மாநில அரசு தேவையான உதவி செய்து வருகிறது. அதன்படி அனைவருக்கும் கல்வி இயக்கத்துக்கு ரூ.2,329.15 கோடியும், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கத்துக்கு ரூ.1,139.52 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ரூ.2,705 கோடியில் நலத் திட்டங்கள்:
மாணவர்களுக்கு மடிக்கணினி, பாடப்புத்தகங்கள், கல்வி உபகரணங்கள், மிதிவண்டிகள், பேருந்து கட்டணச் சலுகைகள் உள்ளிட்ட அனைத்து நலத் திட்டங்களுக்கும் ரூ.2,705 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
குறைந்தது இடைநிற்றல்: கடந்த ஆண்டில் அரசின் சீரிய முயற்சியால் இடைநிற்றல் விகிதம் தொடக்க நிலையில் 0.90, நடுநிலையில் 1.55, இடைநிலையில் 3.76 அளவில் குறைந்துள்ளது. அதன்படி பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களின் இடைநிற்றலை மேலும் குறைக்க சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். இத்திட்டத்திற்காக ரூ.381 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.