இன்று 15-07-2016 கல்விகுரு காமராஜரின் பிறந்தநாள் தமிழகத்தின் கல்வி வளர்ச்சி நாள்
தமிழகத்தின் கல்வி குருவான காமராஜரின் பிறந்த நாள் ஜுலை 15 தமிழகம் முழுவதும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது அவர் ஆற்றிய பணிகள் இதோ
கல்விக் கண் திறந்த காமராசர்
கர்மவீரர், ஏழைகளின் ஏந்தல், கறுப்பு காந்தி, கல்வி வள்ளல் என்றெல்லாம் போற்றப்படுபவர் பெருந்தலைவர் காமராசர் """"என் கடன் பணி செய்து கிடப்பதே"" என்ற உயர் மொழிக்கேற்பத் தன் வாழ்நாள் முழுவதும் நம் இந்திய நாட்டிற்குப் பணி செய்து தியாக வாழ்க்கை வாழ்ந்தவர் """"கர்மவீரர்"" காமராசர். தமக்கென வாழாது பிறர்க்காக வாழும் பொது நல மனிதர்கள் வாழ்வதால்தான் இந்த உலகம் நிலைப்பெற்று இயங்குவதாகப் புறநானூறு பேசுகின்றது. இந்த உண்மைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர் காமராசர் என்றால் அது மிகையாகாது. தென்னாட்டு காந்தியாகத் தமிழ் மண்ணில் அவதரித்து தமிழகத்தை மலர்ச்சியுறச் செய்த காமராசர் 1903-ஆம் ஆண்டு ஜுலைத் திங்கள் 15-ஆம் நாளில் விருது நகரில் பிறந்தார்.
சாதாரண குடும்பத்தில் பிறந்து, ஒரு சாதாரணத் தொண்டனாக காங்கிரஸ் கட்சியில் இணைந்து, தன் அயராத உழைப்பாலும், ஈடில்லாத தியாகத்தாலும் மிக உயர்ந்த நிலைக்கு வந்தவர் காமராசர். மகாத்மா காந்தியின் வழியை விட்டு அகலாத அப்பெருந்தகை, தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் பெரும் புகழ் பெற்றவர். எளிமைக்கும், தியாகத்திற்கும் சிறந்த எடுத்துகாட்டாகத் திகழ்ந்தவர் அருமைத் தலைவர் காமராசர்.
காமராசர் தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவி வகித்த ஒன்பது ஆண்டுகளும் """" தமிழகத்தின் பொற்காலம்"" என்று போற்றப்படுகிறது. காரணம் அவர் ஏழைகளின் வாழ்வில் ஒளியை ஏற்றி வைத்தார். கல்வி அறிவு பெறமுடியாத ஏழைக் குழந்தைகளின் கல்விக் கண்ணைத் திறந்து வைத்தார். எனவே """"கல்வித் தந்தை"" என்று போற்றப்படுபவர். இவர் கல்விக்கு ஆற்றிய பணிகளை இக்கட்டுரையில் காண்போம்.
காமராசர் கல்விக்கு ஆற்றிய பணி
1. கல்வியின் சிறப்பு :
இயற்கையின் மிக உன்னத படைப்பு மனித இனம் . விலங்கிலிருந்து தோன்றியவன் மனிதன் என்றாலும் விலங்கை விட உயர்ந்தவர் மனிதன். அவ்வாறு உயர்ந்து விளங்குவதற்குக் காரணமாக இருப்பது அவனுடைய அறிவு. அனைத்து மக்களிடமும் அறிவு இருந்தாலும் அந்த அறிவு விளக்கம் பெறுவதும் வளர்ச்சியடைவதும் கல்வியினால்தான். அதனால் தான் வள்ளுவர் """" கேடில் விழுச் செல்வம் கல்வி"" என்றார். கல்வி அழியாச் செல்வமும் கூட. வெள்ளத்தால் அழியாது. வேந்தரால் கைப்பற்ற முடியாது. வெந்தழலால் வேகாது. கொடுக்கக் கொடுக்கப் பெருகுமே தவிர குறையாது. கள்வருக்குப் பயமில்லை. காவலுக்கோ மிக எளிது. அது மட்டுமல்ல, கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்புண்டு. கற்றவனே கண்ணுடையவன்; கல்லாதவன் முகத்திரண்டு புண் உடையவடன். ஒரு பிறவியில் ஒருவன் கற்ற கல்வி ஏழு பிறப்புவரைத் தொடர்ந்து வந்து அவனுக்குப் பாதுகாப்பைத் தரும். இத்தகைய கல்விச் செல்வத்தை மக்களாய்ப் பிறந்தோர் அனைவரும் பெற்றுப் பயனுற வேண்டும். வறுமையின் காரணமாக ஒருவன் கல்விச் செல்வத்தை இழந்து விடக்கூடாது. கல்விச் செல்வம் இருந்துவிட்டால் மற்ற செல்வங்கள் இல்லாவிடிலும் அவற்றை எல்லாம் பெற்று விடலாம். அதனால் தான் வள்ளுவர்
""""அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய ரேனு மிலர்""
என்று அருளிச் செய்தார். பொய்யா மொழிப் புலவரின் இம்மெய்யுரையைத் தலைமேற் கொண்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் கல்விச் செல்வத்தைக் கொடுக்க முன் வந்தார் காமராசர். தானங்களில் சிறந்தது கல்வி தானமன்றோ?
2. ஆரம்பப் பள்ளிகளின் வளர்ச்சி
""""வயது வந்தவர்களுக்கெல்லாம் ஓட்டுரிமை உண்டு என ஆன பின்பு, படிக்காமல் இருப்பது தவறு"" என்பதை உணர்ந்த காமராசர் நாட்டு மக்கள் அனைவரும் படிக்க வழி செய்தார். முதலில் அனைவரும் படிக்கக் கல்வி நிலையங்கள் வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு ஆரம்பப் பள்ளிகளின் எண்ணிக்கையை உயர்த்த முடிவு செய்தார். இதன் விளைவாக முதல் திட்ட முடிவில் 21500 ஆக இருந்த ஆரம்பப் பள்ளிகளின் எண்ணிக்கை 30000-க்கும் மேலாக உயர்த்தப்பட்டது. பள்ளி இல்லாத கிராமமே இருக்கக்கூடாது என்று எண்ணினார். தமிழ்நாட்டில் முந்நூறும் (300) அதற்கு மேலும் மக்கள் தொகையுள்ள எல்லா கிராமங்களிலும் ஒரு மைல் சுற்றளவில் பள்ளிக்கூடங்களை ஏற்படுத்தினார். இதற்கான வழிமுறைகளை 1954-அக்டோபரில் சென்னை மாகாணத்தில் பொதுக்கல்வி இயக்குநராகப் பொறுப்பேற்றுக் கொண்ட நெ.து.சுந்தரவடிவேலுவிடம் முதலமைச்சர் காமராசர் மளமளவென்று கூறினார். அவர் கூறியதாவது.
""""காலம் விரைவாக மாறிய படியே உள்ளது. வருங்காலத்தைச் சமாளிக்க எட்டாவது படிப்பு வரை படித்தால் போதாது. எல்லோரும் பத்தாவது படிப்பு வரையிலாவது படிக்கனும். அதற்கு சாதி பாராமல், வருவாய்க் கேட்காமல் எல்லா மாணவ, மாணவியருக்கும் பள்ளி இறுதி வரை இலவசக் கல்வி கொடுக்கத் திட்டம் தீட்டுங்கள். இதை ஒரே மூச்சில் நிறைவேற்றி விடுவதற்கு முடியாது.
மூன்று நான்கு அடியெடுத்து வைத்து நிறைவேற்றுகிற வகையில் உங்கள் திட்டம் இருக்கட்டும்.
எல்லோருக்கும் பத்தாவது வரை இலவசக் கல்வி என்று ஆணையிடுவது மட்டும் போதாது. எல்லோரும் வந்து சேர்ந்தால், சேர்த்துப் படிக்க வைக்கப் போதிய பள்ளிகள் வேண்டும். இப்போதுள்ள பள்ளிகள் போதாது.
தொடக்கப்பள்ளி முதல் உயர்நிலைப் பள்ளி வரை எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்க வேண்டும். தொடக்கப்படிப்பிற்கு எந்தக் குழந்தையும் ஒரு மைலுக்கு மேல் நடக்கக்கூடாது.
இதை மனதில் கொண்டு தாராளமாகப் பள்ளிக்கூடங்களைத் திறக்கச் செய்யுங்கள். நடுநிலைப் பள்ளிகளுக்கு இடையில் உள்ள தொலைவு மூன்று மைலுக்கு மேற்படக்கூடாது.
உயர்நிலைப் பள்ளிகளின் இடைவெளி ஐந்து மைலுக்கு மேல் போகக்கூடாது. இவற்றை நினைத்துப் பள்ளிகளைக் கொடுங்கள் நிதி கிடைக்குமா? என்ற கவலை உங்களுக்கு வேண்டாம்"" என்பதே.
இவற்றை ஆணையிட்டது மட்டுமல்ல, செயலிலும் இறங்கினார். முதல்வராகப் பொறுப்பேற்றவுடன் இராஜாஜி ஆட்சிக் காலத்தில் மூடப்பட்டுக் கிடந்த 6000 பள்ளிகளையும் திறக்க ஆணையிட்டார். மாணவர்கள் பாதி நாள் படிப்பும், மீதி நாள் குலத்தொழிலும் செய்ய வகை செய்யும் இராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்தை ஒழித்தார்.
1954-இல் முதலமைச்சரானவுடன் காமராசர் ஆட்சியில் பல ஆரம்பப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. அனைவரும் கல்வியைப் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் 1954-ஆம் ஆண்டு டாக்டர் அழகப்பச் செட்டியார் தலைமையில் ஒரு கல்வி உயர்நிலைக் குழுவை அமைத்தார் காமராசர். அக்குழு நம் தமிழகத்திற்குப் பொருத்தமானதும் ஏற்றுக் கொள்ளக்கூடியதுமான ஒரு பாடத்திட்ட முறையை உருவாக்கியது. இது தவிர பல அரசு அதிகாரிகள் கிராமங்கள் தோறும் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். கல்வியின் அவசியத்தை கிராம மக்களுக்கு எடுத்துக் கூறினர்.
கிராமத்திலுள்ள ஏழை மாணவர்கள் கல்வி கற்பதற்காக நெடுந்தூரம் பயணம் செய்ய இயலாது என்பதால் ஒரு மைல் தொலைவிற்குள் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. பள்ளிக்கான கட்டடம், மேஜை, நாற்காலி போன்றவற்றைக் கிராமங்களிலுள்ள செல்வந்தர்களே தர முன் வந்தார்கள். இவ்வாறு செய்த முயற்சியால் ஒரே ஒரு ஆசிரியர் மட்டும் கொண்ட பல புதிய பள்ளிகள் திறக்கப்பட்டன.
காமராசர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஒரு ஆண்டிற்குள் (1954-55) தமிழகத்தில் சுமார் 3000 பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிக் கூடங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினால் மட்டும் போதாது கூடுதலாகப் புதிய ஆசிரியர்கள் நியமிப்பது, அவர்களுக்குப் பயிற்சி தருவது என்று பல திட்டங்களைத் தீட்டினார். அக்காலத்தில் அதற்காக சுமார் 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
கல்வியின் சிறப்பை உணராத மக்கள் சின்னஞ்சிறு குழந்தைகளைக் கல்லாத மூடர்களாக்கி வரும் தீமையைக் கண்டு வெகுண்டார் காமராசர். கட்டாய ஆரம்பக் கல்வித் திட்டத்தை உருவாக்கினார். அதோடு வறுமையின் காரணமாகக் குழந்தைகள் படிக்கும் வாய்ப்பை இழந்துவிடக்கூடாது என்று எண்ணி பத்தாம் வகுப்பு வரை சாதி, மத வேறுபாடின்றி அனைத்து குழந்தைகளுக்கும் இலவசக் கல்வித்திட்டத்தை உருவாக்கினார். 1962-ஆம் ஆண்டு இத்திட்டம் உருவானது. இதன் விளைவாகப் பள்ளிகளில் சேர்ந்து படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகியது.
1954-இல் 18 இலட்சம் சிறுவர்கள் மட்டுமே படித்துக் கொண்டிருந்த நிலைமாறி 1961-இல் 34 இலட்சம் சிறுவர்கள் படிக்கும் நிலை ஏற்பட்டது.
1954-இல் 6 வயதிலிருந்து 11 வயதிற்குள் இருக்கக்கூடிய சிறு வயதினரில் 45 சதவிகிதத்தினர் பள்ளி சென்று கொண்டிருந்தனர். 1961-இல் 77.3 சதவிகிதச் சிறுவர்கள் பள்ளிக்குச் சென்றனர்.
இந்தியா முழுவதும் எடுத்துக் கொண்டால் அக்கால கட்டத்தில் 63.6 கதவிகிதத்தினர் மட்டுமே பள்ளி சென்றனர். கேரளம், மேற்கு வங்காளம் , பஞ்சாப் ஆகிய மாநிலங்களை அடுத்து தமிழகத்தில்தான் பள்ளி செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகம் இருந்தது.
கல்வியில்லாததால் தமிழகம் மிகவும் தாழ்ந்த நிலையில் இருந்தது. மக்கள் எழுதப் படிக்கத் தெரியாமல் வண்டிமையும் கட்டை விரலுமாக நின்ற தாழ்ந்த நிலையை அகற்றுவதற்காகக் காமராசர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் அளவிடற்கரியன. 1938-39-க்கும் முன்பிருந்த, சென்னை மாநிலம் முழுமையிலும் 2 கோடியே 62 இலட்சம் ரூபாய் கல்விக்காகச் செலவிடப்பட்டது. அதனை ஐந்தாண்டுத் திட்டத் தொடக்கக் காலத்தில் ரூபாய் 10.57 கோடியாகவும், 1960-61-இல் 15.68 கோடியாகவும் உயர்த்திச் செலவுத் திட்டங்களைத் தயாரித்து நடைமுறைப்படுத்தினார். இச்செயல் தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு ஊற்றுக் கண்ணாகத் திகழ்ந்தது.
3. இலவச மதிய உணவுத்திட்டம்
காமராசர் முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு ஒரு நாள் சுற்றுப்பயணம் சென்று கொண்டிருந்த வழியில் பத்து வயது சிறுவன் ஆடு மேய்த்துக் கொண்டிருப்பதைக் கண்டார். அவனிடம் """"பள்ளிக்கூடம் போய் படிக்கலியா? எதற்காக மாடு மேய்க்கிறே?"" என்று கேட்ட போது அவன் """"படிக்க ஆசைதான் ஐயா! ஆனா பள்ளிக் கூடத்துக்குப் போனா பசி தீருமா? அதனால் மாடு மேய்க்கிறேன். கூலி எதுவும் கிடையாது. சோறும் துணியும் தர்றாங்க"" என்றான். காமராசர் சிறுவனிடம் """"சோறும் துணியும் கிடைச்சா படிக்கப்போவியா?"" என்று கேட்க, அவனும் ‘சரி’ என்றான். உடனே காமராசர் தன் அருகில் நின்றிருந்த அதிகாரியிடம் சொல்லி சிறுவனுக்கு இரண்டு செட் உடைகள் கிடைக்க ஏற்பாடு செய்தார். சிறுவனின் பெற்றோருக்கு இரண்டு மாதத்திற்கான மளிகை சாமான்களும் அரிசியும் அனுப்பி வைக்க உத்தரவிட்டார்.
""""பள்ளிக்கூடத்துக்குப் போனா பசி தீருமா?"" என்ற சிறுவனின் கேள்வி காமராசர் மனதில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தியது. """"வறுமையில் மெலிந்த உடல், ஒளியில்லாத கண்கள், எண்ணெய் இல்லாத தலை, உடையில்லாத உடம்பு, ஒதுங்கி வாழக் குடிசை மற்றும் வயிறார உண்ண கஞ்சி ஆகியவை இல்லாத ஏழை எப்படிப் பள்ளிக்குச் செல்வான்?"". இது அவர் மனதில் எழுந்த மிகப் பெரிய கேள்வி. இந்தக் கேள்விக்குப் பதிலாக அவர் மனதில் பிறந்த திட்டமே இலவச மதிய உணவுத்திட்டம். ஒரு வேளையாவது குழந்தைகளுக்கு உணவு அளித்தால் பள்ளிக்குப் பிள்ளைகளை அனுப்பும் ஆசை பெற்றோர்க்கு ஏற்படுமே என்று எண்ணினார் அவர்.
மேலும், அவர் சிறுவயதில் இருக்கும் போதே பல பள்ளிக்கூடங்களில் """"பிடி அரிசி"" என்ற திட்டத்தின் மூலம் பல ஏழை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கியதை அறிந்திருந்தார். இது தவிர காமராசர் ஆட்சிப் பொறுப்பேற்ற காலத்திலும் பல அரிசன நலத் தொடக்கப் பள்ளிகளிலும், நகராட்சிப் பள்ளிகளிலும் இலவச மதிய உணவு வழங்கப்பட்டது. இவற்றையெல்லாம் அறிந்திருந்த காமராசர் தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் மதிய உணவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த எண்ணினார். அவரே தம் எண்ணத்தை,
""""அத்தனை பேரும் படிக்கணும். வயிற்றில் ஈரமில்லாதவன் எப்படிப் படிப்பான்? அவனுந்தானே இந்தியாவுக்குச் சொந்தக்காரன். ஏழைக் குழந்தைகளுக்குப் பள்ளிக் கூடத்திலேயே சோறு போட்டு படிக்க வைக்கணும். இதைத் தள்ளிப் போட முடியுமா என்ன?.
இது மிகமிக முக்கியம் என்பதால் உடனடியாகத் தொடங்கிவிடணும், பணத்திற்கு எங்கே போவது என்று கேட்பீர்கள். வழி இருக்குது. தேவைப்பட்டால் பகல் உணவிற்கென்று தனியாக வரி போடத் தயங்க மாட்டேன். எப்படியும் எல்லா ஏழைகளும் படிக்கணும் அவர்களுக்குத் தான் தேசம்"" என்று ஆணித்தரமாகக் கூறினார்.
27.03.1955-ஆம் நாள் நாடெங்கிலும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் இலவச மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. பள்ளியின் வேலை நாள்களாகிய 200 நாள்களிலும் எல்லாப் பள்ளிகளிலும் மதிய உணவு இலவசமாக வழங்கப்பட்டது. (திருநெல்வேலி மாவட்டத்தில் எட்டயபுரத்தில் கர்மவீரர் காமராசர் அவர்களே வந்திருந்து இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார்)
1955-ஆம் ஆண்டு காமராசர் மதிய உணவுத்திட்டத்தை ஆரம்பித்த போது அது வெறும் தன்னார்வத் திட்டமாக இருந்தது. அதாவது செல்வந்தர்கள் பல அமைப்புகளிடமிருந்து பெற்ற உதவித் தொகையிலேயே இது நடத்தப்பட்டது. காரணம் அப்போது தமிழக அரசிடம் கடும் நிதி நெருக்கடி இருந்தது. 1957-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இத்திட்டம் தமிழக அரசுத் திட்டமாக மாறியது. மதிய உணவுத் திட்டத்தை ஐந்தாண்டுத் திட்டத்திலும் சேர்க்க முன் வந்தார் காமராசர். மதிய உணவுத் திட்டத்தில் ஏதேனும் முறைகேடுகள் நடப்பதைத் தவிர்க்க """" இதை அதிகாரிகள் மட்டுமின்றிப் பொது மக்களும் சேர்ந்து நடத்த வேண்டும்"" என்று ஆணையிட்டார்.
இத்திட்டம் இலட்சக்கணக்கான குழந்தைகளைப் பள்ளிக்கு வரச் செய்தது. உலக நாடுகள் பலவும் இத்திட்டத்தைப் பாராட்டின. ஓர் அமெரிக்க அறிஞர் அமெரிக்காவில் இதைப் பிரபலப்படுத்தப் போவதாக ஒருமுறை அறிவித்தார். நம் இந்தியப் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் இத்திட்டத்தைப் பெரிதும் பாராட்டினார்.
1961-இல் அமெரிக்காவின் """"கேர்"" என்ற நிறுவனம் காமராசரின் மதிய உணவுத் திட்டத்திற்குப் பல உதவிகள் செய்தது.
பால்பொடி, எண்ணெய், சோள மாவு ஆகிய உணவுப் பொருட்களை இந்தியாவிற்கு இலவசமாக வழங்கியது. அவை முறையாக ஏழைக் குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டன.
இலவச மதிய உணவுத் திட்டத்தை அமல்படுத்திய பின்பு இலவச சீருடை வழங்கும் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்தார் காமராசர். இதனால் """" ஆடையில்லையே ! நைந்து கிழிந்து போன ஆடையுடன் என் குழந்தையை எவ்வாறு பள்ளிக்கு அனுப்புவது?"" என்று தயங்கித் தயங்கி கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த ஆயிரமாயிரம் தாய்மார்களின் உள்ளங்களில் உவகை பூக்கச் செய்தார். தாய்மார்கள் தலைவாரிப் பூச்சூட்டிச் சிறுமிகளைப் பள்ளிக்கு அனுப்பினர்.
இத்துடன் அவர் ஓய்ந்து விடவில்லை. கல்வி வளர்ச்சிக்காகப் புரட்சிகரமான புதிய திட்டம் ஒன்றையும் தமிழகத்தில் அறிமுகப்படுத்தினார். அது தான் பள்ளிச் சீரமைப்புத் திட்டம். இத்திட்டத்தின் படி, பள்ளி வசதிகளைப் பெருக்கும் பணியில் உள்ளூர் மக்களின் ஒத்துழைப்பினைப் பெறுவதற்காக முதல் பள்ளிச் சீரமைப்பு மாநாடு 20.02.1958-இல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கடம்பத்தூரில் நடைபெற்றது.
இத்தகைய மாநாடுகள் வெற்றிகரமாக நடக்க ஆசிரியர்கள் ஆர்வத்தோடு செயல்பட்டனர். கல்வி நிருவாகிகள் முழுமனதுடன் ஒத்துழைப்பு தந்தார்கள். பொது மக்கள் வள்ளல்களாக மாறினார்கள். பள்ளிச்சீரமைப்பு மாநாடுகள் வாயிலாக பள்ளிகளின் வசதிகளைப் பெருக்கும் முயற்சிக்குத் தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பு இருந்தது.
எல்லாவற்றிற்கும் அரசு நிதியை எதிர்பார்க்காமல் உள்ளூர் மக்கள் வழங்கும் நன்கொடை மூலம் பள்ளி வசதிகளைப் பெருக்கும் முயற்சி நல்ல பலனைத் தந்தது.
இத்தகைய மாநாடுகளில் காமராசர் கலந்து கொண்டு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்தார். அன்று கல்வியமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம் பெரும் ஒத்துழைப்பு தந்தார்.
1958 முதல் 1963-ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 150 பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள் பெரிய அளவில் வெற்றிகரமாக நடந்தன. இதில் முதலமைச்சரோ, பிற அமைச்சரோ பங்கு கொள்ளாத மாநாடுகள் சிலவே.
பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள் மூலமாக பொதுமக்கள் மனமுவந்து அளித்த நிதி ரூ.6.47 கோடி. இதில் நான்கு கோடி பணமாகவும், மீதி மேசை , நாற்காலி போன்ற பொருள்களாகவும் கிடைத்தன. பணத்தைக் கொண்டு குழந்தைகளுக்குச் சீருடை, பென்சில், நோட்டுப் புத்தகங்கள், பலகை முதலியன வழங்கப்பட்டன.
அன்று காமராசர் தொடங்கி வைத்த பள்ளிச் சீரமைப்புத் திட்டம் இன்று வரை பெரும் பொருள் ஈட்டி கல்வித் துறைக்குப் பேருதவி புரிந்து வருகிறது.
இத்திட்டத்தை அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு போன்ற தலைவர்கள் ‘புரட்சித்திட்டம்’ என்று பெரிதும் பாராட்டினார்கள்.
""""தமிழகத்தில் மலர்ந்திருக்கும் இவ்வியக்கம் பாரதநாடு முழுவதும் பரவி, கல்வி ஒளி பெருக்கட்டும்"" என்று வாழ்த்தினார்கள்.
ஒரு நாட்டின் உண்மையான , முழுமையான வளர்ச்சி என்பது அந்நாட்டின் கிராமங்களின் வளர்ச்சியிலே உள்ளது. பஞ்சாயத்து ராஜ்யங்களின் ஆட்சி நன்கு மலரவேண்டும் என்பது காந்தியடிகளின் ஆவல். காந்தியடிகளின் எண்ணப்படி பஞ்சாயத்து ராஜ்யம் கண்டவர் காமராசர். அதன் அடிப்படையில் கல்வித் துறையிலும் புதிய மாறுதல் செய்யப்பட்டது. அது வரை ஆரம்பக் கல்விப் பொறுப்பு மாவட்டக் கழகங்களிடம் இருந்தது. இப்புதிய திட்டத்தின்படி அந்த வட்டாரங்களில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களிடம் ஆரம்பக் கல்விப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
அதிகாரங்கள் ஒரே இடத்தில் குவியக் கூடாது; அது பரவலாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளாட்சி அமைப்புகளிடம் கல்விக் கூடங்களின் நிருவாகப் பொறுப்பினை ஒப்படைத்தது ஒரு புரட்சிகரமான செயலாகும்.
4. உயர் கல்வி வளர்ச்சி
ஆரம்பக் கல்வியின் வளர்ச்சிக்காக அவர் எடுத்துக்கொண்ட பெரும் முயற்சிகளுக்குச் சிறிதும் குறைவில்லாமல், உயர்நிலைக் கல்வியிலும் ஆர்வம் காட்டினார். அவர் முதலமைச்சரான போது சென்னை மாகாணத்தில் 471 உயர்நிலைப் பள்ளிகள் மட்டுமே இருந்தன. 1961-இல் இந்த நிலை மாறி தமிழகத்தில் மட்டும் 1361 உயர்நிலைப் பள்ளிகள் இருந்தன.
கல்லூரிக் கல்வியிலும் அவர் காண்பித்த ஆர்வம் அளவிடற்கரியது. அவரது ஆட்சியில் கல்லூரிகளின் எண்ணிக்கை 28-லிருந்து 50-க்கும் மேற்பட்டு உயர்ந்தது. அதோடு மட்டுமல்லாது 6 பயிற்சிக் கல்லூரிகளைப் பெற்றது. எண்ணற்ற ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளையும் காமராசர் தோற்றுவித்தார். மாணவர்களுக்குக் கல்வி மட்டும் இருந்தால் போதாது ஆரோக்கியமும் வேண்டும் என்ற எண்ணத்தில் முதன் முதலாக 3 உடற்பயிற்சிக் கல்லூரிகளையும் தோற்றுவித்தார்.
முதல்வராகப் பணியேற்றதும் கல்விக்கு முக்கியத்துவம் நல்கிய அவர் உடனடியாக 9 பொறியியல் கல்லூரிகளையும், 24 பல்தொழில் பயிற்சி நிறுவனங்களையும் தமிழகத்தில் உருவாக்கினார். 6 மருத்துவக் கல்லூரிகளையும் தமிழகம் பெறும் வாய்ப்பினை ஏற்படுத்தினார். கால்நடை மருத்துவக் கல்வி, வேளாண்மைக் கல்வி , சட்டக் கல்வி ஆகிய துறைகளிலும் அதிகமாகக் கவனம் செலுத்தினார்.
கல்வித் திட்டத்தில் தொழில் நுட்பம், பாலிடெக்னிக் மற்றும் ஐ.டி.ஐ கல்வியைக் கொண்டு வந்து உலகம் வியக்கச் செய்த அதிசயத் தலைவர் காமராசர். பள்ளி மற்றும் கல்லூரிகள் எண்ணிக்கையில் மட்டும் உயர்ந்தால் போதாது, தரத்திலும் உயர வேண்டும் என்றார். அதற்காக ஆசிரியர்களுக்கு மறு பயிற்சி அளிக்கும் திட்டத்தைக் கொண்டு வந்தார்.
மாணவர்களும், பொதுமக்களும் பலதரப்பட்ட நூல்களைப் படித்து அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழ்நாட்டில் தான் பொது நூலகச் சட்டம் இயற்றினார். 1953-இல் ஒரே ஒரு கிளை நூலகம் மட்டுந்தான் இருந்தது. மக்களின் அறிவு வளச்சியைக் கருத்தில் கொண்டு 1961-இல் 454 கிளை நூலகங்களை ஏற்படுத்தினார். 12 மாவட்ட மத்திய நூலகங்களும் தோற்றுவிக்கப்பட்டன.
மேலும் அக்காலத்தில் பள்ளிகள் ஆண்டிற்கு 180 நாள்கள் நடைபெற்று வந்தன. காமராசர் தேவையற்ற விடுமுறை நாட்களைக் குறைத்து ஆண்டிற்கு 200 நாள்கள் கல்வி என்ற முறையைப் புகுத்தினார்.
அனுபவம் மிக்க முதியோர்களது அறிவு முழுமையாகப் பயன்படும் பொருட்டு முதியோர் கல்வியையும் தொடங்கினார். கல்வித்துறையில் அதற்கென்று ஒரு பிரிவை ஏற்படுத்தி 165 முதியோர் எழுத்தறிவுப் பள்ளிகளை ஏற்படுத்தினார்.
5. தமிழ்க்கல்வி
கல்வித் தந்தையாக விளங்கிய காமராசர் தமிழின் மீது தணியாத பற்று கொண்டிருந்தார். 1965-இல் தமிழ் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு காமராசர் ஆட்சியில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தமிழ் அறிஞர்களை உறுப்பினர்களாகக் கொண்ட ‘தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மையம்’ என்ற அமைப்பினை 1956 -இல் அரசு நிறுவியது. இந்த மன்றத்துக்கு கல்வி அமைச்சரே தலைவராக நியமிக்கப்பட்டார். கல்லூரிகளில் பாடங்களைக் கற்பிக்கும் மொழியாகத் தமிழைக் கொண்டு வரவும், தமிழில் மலிவான விலையில் உயர்க் கல்விக்கான பாடநூல்களை வெளியிடவும் இந்த மன்றம் செயல்பட்டது.
தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றம் 26.01.1959 முதல் முறைப்படி தொடங்கிச் செயல்பட ஆரம்பித்தது. இதனுடன் தமிழ் நூல் வெளியீட்டுக் கழகமும் தோற்றுவிக்கப்பட்டது.
தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றத்தின் முதல் கூட்டம் 01.03.1959-இல் அன்றைய கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியம் தலைமையில் கூடி தமிழைப் பயிற்சி மொழியாக்குவதற்குத் திட்டம் வகுத்து, முன்னோடியாக கோவை அரசினர் கல்லூரியைத் தேர்ந்தெடுத்து 1960-61-இல் பி.ஏ. வகுப்புக்கு மட்டும் தமிழைப் பயிற்று மொழியாக்குவது என்று தீர்மானித்தது.
இத்திட்டத்தை 1963-64-இல் அனைத்துக் கல்லூரிகளுக்கும் விரிவுபடுத்துவது என்றும் தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மையம் முடிவு செய்தது.
தமிழைப் பயிற்று மொழியாகப் படிப்பவர்களுக்கு மாத ஊக்கத் தொகையும், அரசு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமையும் வழங்கப்பட்டன. தரமான ஆங்கிலப் பாடநூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார்கள்.
காமராசர் ஆட்சியில் ‘கல்லூரித் தமிழ்க் குழு’ ஒன்றினை ஏற்படுத்தினார். முன்னாள் துணை வேந்தரும், கலைக்கதிர் இதழ் ஆசிரியருமான தாமோதரன் தலைமையில் இக்குழு நியமிக்கப்பட்டது.
இக்குழுவில் தெ.பொ.மீனாட்சிசுந்தரம், டாக்டர் மு. அறம் போன்றவர்கள் உறுப்பினர்களாக இருந்தனர். இக்குழுவினால் உளவியல், வானியல், இயற்பியல், வேதியில், புள்ளியியல் உள்ளிட்ட பல்வேறு பாடங்களுக்காகக் கலைச் சொல் அகராதி தயாரிக்கப்பட்டு 1960-இல் மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டது. இந்த முயற்சியினால் அக்காலத்தில் தமிழ் வளர்ச்சிப் பணி புதிய பரிமாணத்தைப் பெற்றது. கலைச் சொற்களுக்குத் தமிழ்ச் சொற்களை உருவாக்கும் ஒப்பற்றப் பணியினை இக்குழு மூலம் செய்து வாகை சூடி வரலாற்றில் அழியா இடம் பெற்றார் காமராசர்.
மேலும், இக்கல்லூரித் தமிழ்க் குழுதான் முதன்முதலில் பதினாறு பாடப் புத்தகங்களைத் தமிழ் மொழியில் வெளியிட்டுத் தமிழ் மொழிக்குப் பெருமை சேர்த்தது.
அன்று ‘தமிழில் கல்லூரிப்பாடம்’ என்று அவர் தொடங்கிய செயல் தான் இன்று தமிழகம் முழுவதும் சூறாவளியாக வீசிக் கொண்டிருக்கிறது. பொறியியல் கல்லூரிகளிலும் கூட தமிழில் படிக்க வாய்ப்பினை ஏற்படுத்தித் தருமாறு மாணவ சமுதாயம் கேட்க, அரசும் அதற்கு அனுமதி அளித்துள்ளது.
1957-ஆம் ஆண்டில் தமிழ்க்கலை களஞ்சியத்தின் முதல் தொகுப்பு காமராசர் அரசால் வெளியிடப்பட்டது. அது முதல் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்க் கலைக் களஞ்சியம் வெளியிடப்பட்டது. இந்திய மொழிகளில் கலைக் களஞ்சியம் முதன் முதலில் தமிழிலேயே வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அறிவியல் நூல்களும் தமிழ்மொழியில் வரவேண்டும் என்று எண்ணிப் பல அறிவியல் நூல்களைத் தமிழில் வெளி வரச் செய்தார் காமராசர். விஞ்ஞான வல்லுநர்கள் பலர் தங்களிடமிருந்த கைப்பிரதிகளை அரசிடம் தந்தனர். அவர்களுக்கு அரசுப் பரிசுகள் அளித்துப் பாராட்டியது.
இன்று ‘எங்கும் தமிழ்; எதிலும் தமிழ்;’ என்று முழங்கி வருவதைக் காண்கிறோம். அதற்கு வலுவான அடித்தளம் அமைத்தவர் காமராசர் என்று சொன்னால் அது மிகையல்ல.
6. ஆங்கிலக் கல்வியிலும் அக்கறை
ஆங்கிலேயர் ஆட்சிக்குப்பிறகு தனது நிலை கெட்டுத் தடுமாறி நின்ற தமிழகத்திற்குத் தன்மான உணர்வினை ஏற்படுத்திடக் """" கல்லூரிகளிலும் கவினுறு தமிழ்"" என்ற ஒப்பற்ற திட்டத்தை உருவாக்கிச் செயல்படுத்திய காமராசர், உலக அறிவிற்குத் துணை செய்யும் ஆங்கிலக் கல்வியும் தேவை என்பதை அன்றே உணர்ந்திருந்தார். அதனால் 1959-ஆம் ஆண்டு முதற்கொண்டு பிரிட்டிஷ் கவுன்சிலின் துணையுடன் தமிழகப் பட்டதாரி ஆசிரியர்களும், இடைநிலை ஆசிரியர்களும் ஆங்கிலத்தில் புலமைப் பெற்றிடப் பல்வேறு வழிகளை ஏற்படுத்தினார்.
7. காமராசர் வழங்கிய கல்விச் சலுகைகள்
இவ்வாறு கல்வித் துறையில் அரும்பணியாற்றிய காமராசர் செய்த மற்றுமொரு செயல் மாணவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது. ஆம்! தமிழக மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல சலுகைகளை அளித்தார்.
வருடம் ஒன்றுக்கு ரூபாய் மூவாயிரத்திற்கும் மேற்படாத வருமானத்தைக் கொண்டு வாழ்பவர்களின் குழந்தைகளுக்கு முழுச் சலுகையினை அளித்தார்.
மாத வருமானம் 100 ரூபாய்க்குக் குறைந்தவர்களின் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி கிடைக்கவும் ஏற்பாடு செய்தார்.
அறிவுத் தகுதியினை அடிப்படையாகக் கொண்டு 55 மாணவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூபாய் 30 வீதம் உபகாரச் சம்பளம் அளித்தார்.
தொழிற்கல்வி, மருத்துவம், வேளாண்மை, கால்நடை மற்றும் அரிஜன நலம் ஆகிய துறைகளில் பயின்ற மாணவர்களுக்கு உபகாரச் சம்பளங்கள் வழங்கி இத்துறைகளில் சிறந்த மாணவர்களை உருவாக்கி நாட்டிற்கு வழங்கினார்.
கல்விக்கு ஊற்றுக் கண்ணாகப் பணியாற்றும் ஆசிரியர்களின் நற்றொண்டைப் பாராட்டும் வகையில் அவர்களது குழந்தைகளுக்காக ரூபாய் 500-ஐ உபகாரச் சம்பளமாகத் தந்தார். இதனால் பிற மாநிலங்களுக்கும் வழிகாட்டியாகத் திகழ்ந்தார்.
ஆரம்பக்கல்வி கற்றுத்தரும் ஆசிரியர்களின் ஊதியத்தையும் உயர்த்தினார். ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி கிடைக்க ஏற்பாடு செய்தார்.
ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவும், கிராமங்களில் அவர்களுக்கு வீடு கட்டித் தரவும் பல திட்டங்களைத் தீட்டி நடைமுறைப்படுத்தினார்.
அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்குக் கல்விக் கட்டணத்தில் சலுகைகள் தந்தார்.
1968-ஆம் ஆண்டு இளைய தலைமுறையினர் அனைவரும் வெறும் கல்வி அறிவு மட்டுமின்றித் தங்களைத் தற்காத்துக் கொள்ள அரசியல் அறிவும், பொருளாதார அறிவும் பெற வேண்டும் என்பதற்காகத் திருச்சியை அடுத்த ஸ்ரீரங்கத்தில் கல்லூரி மாணவர்களுக்கு 7 நாள்கள் தேசிய மாணவர் பயிற்சி முகாம் நடத்தியவர் பெருந்தலைவர் காமராசர்.
மாணவர்கள் அரசியலைப் பற்றி அறிந்திருக்க வேண்டுமே தவிர படிக்கின்ற காலத்தில் அரசியலில் ஈடுபடக்கூடாது என்று அவர்களுக்கு அறிவுரை கூறியவர் காமராசர்.
இவ்வாறு கல்வியைப் பொதுவுடைமையாக்கிப் பெரும் புரட்சி செய்தவர் காமராசர். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, வறுமையில் சிக்கி, ஆறாவது வகுப்பு வரை கல்வி பயின்று, துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்து, பிறகு காங்கிரஸ் தொண்டராக அரசியலில் நுழைந்து, தலைவராகி, முதலமைச்சராகப் பொறுப்பேற்ற காமராசர் தன் அனுபவத்தின் காரணமாக எல்லோருக்கும் கல்வி அளிக்க வேண்டும் என்பதைத் தனது ஆட்சியின் மிகப் பெரிய லட்சியமாகக் கருதி செயல்பட்டார் கல்விக் கண் திறந்த காமராசர்.