பிச்சை எடுத்த பணத்தில் நல உதவி இப்படியும் ஒரு மாமனிதர்
முதியவர் ஒருவர், பிச்சை எடுத்த பணத்தில் மாணவ, மாணவியருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி நெகிழ வைத்தார்.துாத்துக்குடி மாவட்டம், ஆலங்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர், புல் பாண்டியன், 65; பிச்சை எடுத்து பிழைக்கும் இவர், புதுக்கோட்டை மாவட்டம், புல்வயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில், 320 மாணவ, மாணவியருக்கு, 30 ஆயிரம் ரூபாயில் பாய், சில்வர் டிரம், பிளாஸ்டிக் பொருட்கள், எழுது பொருட்கள், நோட்ஸ் ஆகியவற்றை
வழங்கினார்.பின், மாணவர்கள் மத்தியில், அவர் பேசியதாவது:என் மனைவி இறந்துவிட்டார். ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். என் பிள்ளைகள் என்னை விரட்டிவிட்டதால், வேறு வழியின்றி பிச்சை எடுத்தேன். பிச்சை எடுத்த பணத்தை கொண்டு, துாத்துக்குடியில் சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட வெள்ளத்தின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க முன் வந்த போது அதிகாரிகள் தடுத்துவிட்டனர்.
இதையடுத்து, ஏழை மாணவ, மாணவியருக்கு உதவ திட்டமிட்டேன். கும்பகோணம், வடக்குமாங்குடி, கொத்தங்குடி உட்பட, 18 அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு உதவிகள் வழங்கினேன்.
திருவையாறு அருகே விளாங்குடி பஞ்., யூனியன் தொடக்கப் பள்ளியில், 125 ஏழை மாணவர்களுக்கு, 8,000 ரூபாய் மதிப்பில் பொருட்கள் வழங்கினேன்.
நான் பிச்சை எடுத்த பணத்தில் வாங்கி கொடுப்பதை, நீங்கள் ஏற்றுக் கொண்டது எனக்கு மனநிம்மதி அளிக்கிறது.இவ்வாறு கூறி, கண்ணீர் வடித்தார்.பொருட்களை பெற்றுக் கொண்ட மாணவ, மாணவியர், ஆசிரியர்கள், முதியவருக்கு நன்றி தெரிவித்தனர்.