போதைப் பொருள்கள் பயன்பாட்டில் இருந்து மாணவர்களைப் பாதுகாக்க வேண்டும்
போதைப் பொருள்கள் பயன்பாட்டிலிருந்து மாணவர்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு புகையிலை கட்டுப்பாட்டுக்கான தமிழக மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சிரில் அலக்ஸாண்டர் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
புகையிலைக்கு எதிரான குழந்தைகள் அமைப்புடன் சேர்ந்து பள்ளிகள் அருகே உள்ள கடைகளில் ஜனவரி முதல் மார்ச் வரை நடத்திய கணக்கெடுப்பில், சிகரெட், புகையிலை உள்ளிட்ட பல்வேறு போதைப் பொருள்கள் விற்பனை நடைபெறுவது தெரியவந்தது.
மாணவர்களை தீய பழக்கத்தில் இருந்து காப்பாற்றுவது சமுதாயத்தின் கடமையாகும். எனவே பள்ளி, கல்லூரி வளாகங்களுக்கு அருகே போதைப் பொருள்கள் விற்பனை நடைபெறுகிறதா என்று கண்காணிக்க வேண்டும்.
அந்தந்த கல்வி நிறுவனங்களின் தலைவர் இதற்கு பொறுப்பேற்று, நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.