ஆகஸ்ட் 15-ல் தொடங்குகிறது "ஸ்வயம் திட்டம்
இணைய வழியில் அனைத்து வகையான கல்விகளையும் அளிக்கும் "ஸ்வயம்' திட்டத்தை வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் தொடங்கி வைக்க இருக்கிறார்.
முன்னெப்போதும் இல்லாத வகையில் இணையதளம் வழியாக இலவசமாக வழங்கப்படும் இக்கல்வியில் பள்ளி, கல்லூரி, இளநிலை, முதுநிலை என அனைத்துக் கல்விகளும் தரமாகவும் இலவசமாகவும் வழங்கப்பட இருக்கிறது.
மொத்தம் 2,000 வகை படிப்புகள் இதில் இடம் பெறவுள்ளன. ஒரே நேரத்தில் 10 லட்சம் பேர் வரை இதற்கான இணையதளத்தைப் பயன்படுத்த முடியும்.
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமல்படுத்தும் இத்திட்டத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தொழில்நுட்பக் கூட்டாளியாக இணைந்துள்ளது. இத்திட்டம் அமல்படுத்தப்படும்போது உலகிலேயே இணையவழியில் கல்வி அளிக்கும் மிகப்பெரிய கல்வி மையமாக "ஸ்வயம்' அமையும். இத்திட்டத்தின் மூலம் இந்தியாவில் எந்தப் பகுதியில் உள்ள மாணவரும் இணையதளம் மூலம் தான் விரும்பும் பாடத்தை தலைசிறந்த ஆசிரியர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள முடியும்.