மொழிபெயர்ப்பாளர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அழைப்பு
பிற மொழி நூல்களை மொழிபெயர்ப்பு செய்தவர்கள், மொழிபெயர்ப்பாளர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்நாடு வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு தமிழுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் பாடுபடும் தமிழறிஞர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா எண்ணற்ற விருதுகளும் பரிசுப் பாராட்டுச் சான்றுகளும், நலத்திட்டங்களும் வழங்கிச் சிறப்பித்து வருகிறார்.
இந்த வரிசையில், “சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச் செல்வங்கள் கொணர்ந் திங்குச் சேர்ப்பீர்” என்ற மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் கூற்றுப்படி, பிறமொழிப் படைப்புகளைச் சிறந்த முறையில் தமிழாக்கம் செய்யும் 10 மொழிபெயர்ப்பாளர்களுக்கு ஆண்டுதோறும் மொழிபெயர்ப்பாளர் விருது வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் பேரவை விதி 110-ன் கீழ் சட்டசபையில் அறிவித்தார். அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில் பிறமொழிப் படைப்புகளைத் தமிழாக்கம் செய்து வரும் மொழிபெயர்ப்பாளர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்கள் புகைப்படத்துடன் தன் விவர குறிப்புகளுடனும் மொழிபெயர்ப்புச் செய்த நூல்களின் விவரம் மற்றும் அந்த நூல்களின் ஒரு படி வீதமும் வரும் 31-ந்தேதிக் குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும்.அனுப்ப வேண்டிய முகவரி, தமிழ் வளர்ச்சி இயக்குனர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ் வளர்ச்சி வளாகம், முதல் தளம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை - 600008.தொலைபேசி எண்: 044 2819 0412, 044 2819 0413 மின்னஞ்சல் முகவரி: tamil valarchi thurai@gmail.com.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.