பள்ளிக்கூடங்களில் உளவியல் நிபுணர் பணியிடங்களை உருவாக்க நடவடிக்கை: தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
பள்ளிக்கூடங்களில் உளவியல் நிபுணர் பணியிடங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் ரங்கநாயகி என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘அண்மை காலங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. அதனால், ஒவ்வொரு பள்ளிகளிலும் பயிற்சி பெற்ற உளவியல் நிபுணர்களை, முழு நேரப்பணியாளராக நியமிக்கவேண்டும். அந்த நிபுணர்களுடன், குழந்தைகள் கலந்துரையாடல் செய்வதன் மூலம், அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கும், சந்தேகங்களுக்கும் தீர்வு கிடைக்கும்.
மேலும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற தடுப்பு சட்டம் குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக புகார் செய்ய உருவாக்கப்பட்ட 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும், பொதுமக்கள் மத்தியில் விளம்பரப்படுத்தவேண்டும்‘ என்றும் கூறியிருந்தார்.
மேலும் அந்த மனுவில், ‘குழந்தைகளை பாலியல் கொடுமை செய்யும் குற்றவாளிகள் குறித்த விவரங்களை பொதுமக்களுக்கு தெரியும் விதமாக ஒரு இணையதளத்தை உருவாக்கி, அதில் வெளியிடவேண்டும். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றங்களை உருவாக்கவேண்டும்’ என்றும் கூறியிருந்தார்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பதவியை நிரப்புவது குறித்து தொடரப்பட்ட வழக்கு இந்த ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த பதவியை நிரப்ப தமிழக அரசுக்கு 2 மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தலைவர் பதவியை நிரப்பிய பின்னர், அதுதொடர்பான அறிக்கையை வருகிற செப்டம்பர் 2-ந் தேதி தாக்கல் செய்யவும் ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போது, ஒரு பள்ளிக்கூடத்துக்கு ஒரு உளவியல் நிபுணரை நியமிக்கவேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை வைத்துள்ளார். இந்த திட்டத்தை செயல்படுத்த சாத்தியம் இல்லை என்று நாங்கள் கருதுகிறோம். ஏனென்றால், இது ஒரு நீண்ட காலத்திட்டமாகத்தான் மேற்கொள்ள முடியும். மேலும், உளவியல் நிபுணர் பதவிக்கு, தகுதியான, போதுமான எண்ணிக்கையில் தகுந்த நபர்கள் உடனே கிடைக்கமாட்டார்கள்.
அதனால், கல்வி நிறுவனங்களில் உளவியல் நிபுணர்கள் பணியிடத்தை உருவாக்க தகுந்த நடவடிக்கையை தமிழக அரசு இப்போதே தொடங்கவேண்டும். இந்த வழக்கில், வேறு எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்க நாங்கள் விரும்பவில்லை. அதேநேரம், இந்த வழக்கில் மனுதாரர் மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பதவி நிரப்பப்பட்ட பின்னர், அந்த கோரிக்கைகளை அவரிடம் மனுதாரர் முன்வைக்கலாம். இந்த வழக்கை முடித்து வைக்கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.