மருத்துவ பொது நுழைவுத்தேர்வு: அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்
மருத்துவ பொதுநுழைவுத் தேர்விற்கான அவசரச் சட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கையெழுத்திட்டுள்ளார்.
நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த 1-ம் தேதி முதல்கட்ட நுழைவுத் தேர்வு நடந்தது. சுமார் 6.5 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். இதை தொடர்ந்து வரும் ஜூலை மாதம் 24-ம் தேதி அடுத்தக்கட்ட நுழைவுத் தேர்வு நடக்க இருக்கிறது.
பொது நுழைவுத் தேர்வுக்கு தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து ஓராண்டுக்கு பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் என கடந்த சில தினங்களுக்கு முன்னர் செய்திகள் பரவின. ஆனால் இத்தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி நட்டா மறுத்தார்.
இந்நிலையில், மருத்துவ பொதுநுழைவுத் தேர்விற்கு ஒப்புதல் அளிக்கும் அவரசச் சட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று கையெழுத்திட்டுள்ளார். மேலும் சட்டத்தில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா உள்பட மாநில அரசு நடத்தும் அரசு கல்லூரிகளுக்கு இந்தாண்டு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் இந்தாண்டு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும். ஆனாலும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு நுழைவுத் தேர்வு கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.