கால்களால் பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர்
கைகளை இழந்த மாற்றுத் திறனாளி மாணவர் ஒருவர் கால்களால் பிளஸ்-2 தேர்வை எழுதி சாதித்துள்ளார். தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு தொடங்கியுள்ளன. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், காலால் தேர்வெழுதி அசத்தல் சாதனை செய்துள்ளார் இந்த மாணவர்.
அரசு உதவிபெறும் பள்ளியான குமாரபாளையம் நேரு நினைவு சம்பூரணியம்மாள் மாற்றுதிறனாளிகள் பள்ளியை சேர்ந்தவர் மகேஷ்குமார். 18 வயதான இவருக்கு இரு கைகளும் இல்லை. இருந்தபோதும் தனது மன உறுதியால் பல்வேறு தடைகளைத் தாண்டி பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் தன் காலால் தமிழ் முதல் தாள் தேர்வை எழுதியுள்ளார். இவரது தந்தை மஞ்சுநாதன், கிருஷ்ணகிரி மாவட்டம், பல்லேருஹள்ளி கூலி தொழிலாளி. இவர், 2014ல் நடந்த 10ம் வகுப்பு தேர்வில், காலால் எழுதி, 500க்கு, 273 மதிப்பெண் பெற்று, தேர்ச்சி பெற்றார். இதேபோலவே பிளஸ்-2 தேர்விலும் வெற்றி பெற்று சாதிப்பேன் என்கிறார் இந்த மாணவர்.