இந்தியாவில் அழியும் தருவாயில் 365 விலங்கினம், 1236 தாவரம்: தற்கால சூழல் சவாலை எதிர்கொள்ள அறிவுரை
சேலம் பெரியார் பல்கலைக்கழக உயிரி அறிவியல் புலம் சார்பாக “சுற்றுச்சூழல் உயிரி அறிவியல் மற்றும் அதன் சாதனைப் பயன் பாடுகள்” எனும் தலைப்பில் 2 நாள் தேசியக் கருத்தரங்கு நடந்தது.
ஒருங்கிணைப்பாளர் ப. தங்கவேல் கருத்தரங்கத்தின் முக்கியத்துவம் பற்றி பேசினார். துணைவேந்தர் சி.சுவாமிநாதன் கருத்தரங்கில் பேசியதாவது:
உலகின் தற்போதைய மக்கள் தொகையான 7.2 பில்லியன் எதிர்வரும் 2050-ம் ஆண்டு 9.2 பில்லியனாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதிகப்படியான மக்களின் அன்றாடத் தேவைகளுக்கு நிலம், நீர், காற்று மற்றும் ஏனைய இயற்கை வளங்களை முறையற்ற வகையில் பயன்படுத்துவதே சுற்றுச்சூழல் பிரச்சினைகளின் மூல காரணமாகும். புவி வெப்பமய மாதல், ஆற்றல் பற்றாக்குறை, அதிகப்படியான உணவுத்தேவை, பாதுகாப்பு, மண்வளம், காலநிலை மாற்றம், உயிரினங்களின் அழிவு மற்றும் பருவகால மாற்றங்களினால் ஏற்படும் நோய்கள் போன்றவை தற்கால சூழலின் சவால்களாக திகழ்கிறது.
பிரேசிலில் பதிவாகியுள்ள ஏறத்தாழ 3 முதல் 5 டிகிரி வரை வெப்பநிலை உயர்வானது 80 சதவீத கொசுக்களின் பரவலுக்கும், “சிகா” வைரஸ் பரவுவதற்கும் முக்கியக் காரணியாக அமைகிறது என அறிவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். 2016-ம் ஆண்டு உயர்ந்த அளவில் வெப்பநிலை உலகெங்கிலும் காணப்படும் வாய்ப்புள்ளதாக அமெரிக்காவில் உள்ள தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் கூறியுள்ளது.
80 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆற்றல் தேவைகள் நிலக்கரியின் மூலம் பெறப்படுவதால் சூழல் மாசுபாடு அடைவதோடு புவி வெப்பமயமாதலுக்கும் முக்கிய காரணியாக விளங்குகிறது. இந்தியாவில் 365 விலங்கினங்களும், 1236 தாவர இனங்களும் அழியும் தருவாயில் உள்ளதாக இந்திய விலங்கியல் கணக்கெடுப்பு நிறுவனம் கூறியுள்ளது. மேற்கண்ட சூழல் சவால்களை எதிர்கொண்டு சூழல் மண்டலங்களைக் காப்பதற்கு பல்துறை ஆராய்ச்சி இன்றியமையாததாக விளங்குகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
கருத்தரங்கில் ஹைதராபாத் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் பிரசாத் மற்றும் ஆசிரியர்கள், ஆராய்ச்சி மற்றும் முதுநிலை மாணவ,மாணவியர்கள் கலந்து கொண்டனர்.