கல்பனா சாவ்லா : பிரபஞ்சத்தில் இருந்து வந்தவர்..!
விண்வெளியில் பயணம் செய்த முதல் இந்தியப்பெண்ணான கல்பனா சாவ்லா, விண்வெளிக்குள் முதன்முறையாக நுழையும்போது இப்படிச் சொன்னார் - "நட்சததிரங்களையும், பால்வெளி மண்டலத்தையும் பார்க்கும் போது ஒரு சிறிய நிலப்பகுதியில் இருந்து நாம் வருகிறோம் என்ற எண்ணமே தோன்றாது, சூரிய குடும்பத்தில் இருந்து வந்தது போல்தான் தோன்றும்..!" அவரின் கடைசி வார்த்தைகள் பிப்ரவரி 1, 2003 அன்று விண்வெளியில் இருந்து சக விண்வெளி வீரர்களுடன் கொலம்பிய விண்கலத்தில் பூமிக்கு திரும்புகையில் விபத்து ஏற்பட்டு வெடித்து சிதறும் முன் உதிர்ந்தது. தான் கண்ட கனவுகளுக்காக உயிர்விட்ட கல்பனா சாவ்லாவின் நினைவாக 'கல்பனா சாவ்லா வருடாந்த விண்வெளி உரையாடல்' (Kalpana Chawla Annual Space Dialogue) நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது, அதில் அதில் கலந்து கொண்ட அமெரிக்க விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் கல்பனா சாவ்லாவின் கனவு ஒன்றை பற்றி உரையாடியுள்ளார்..!
வாய்ப்பு இல்லை : விண்வெளிக்குள் சென்று திரும்பும் நங்கள் "நாடு முழுக்க பயணித்து என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறோமோ அதை செய்வதற்கு" ஏகப்பட்ட தடைகள் இருக்கிறது. இதனால் ஆர்வமுள்ள மாணவர்களிடம் சென்று கலந்து உரையாடும் வாய்ப்பு கிடைக்கப்பெறுவதே இல்லை என்று வருத்தம் தெரிவித்தார் சுனிதா வில்லியம்ஸ்.
மாணவர்களுடன் கலந்துரையாடல் : மேலும் , விண்வெளிக்கு சென்று திரும்பும் ஒவ்வொருவரும் மாணவர்களை சந்திக்க்கவும் அவர்களுடன் பேசவும் தான் விரும்புகிரார்கள், அதற்கான வாய்ப்புகளை அதிகம் ஏற்படுத்திக் கொடுத்தால் எங்களால் பல மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்த்த முடியும் என்றும் கூறினார்.
கல்பனா சாவ்லாவின் கனவு : விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் கனவும் இதுவாகத் தான் இருந்தது அவர் "இளம் குழந்தைகள் பிரபஞ்சத்தின் கைகளில் உள்ள விண்வெளி புதிர்களை ஆராய வேண்டும் என்று விரும்பினார்"
கடமை : கல்பனா சாவ்லாவின் இந்த கனவானது விண்வெளி மையங்களின் கைகளில் தான் உள்ளது என்றும் அதை நிறைவேற்றுவது ஒவ்வொரு விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் கடமை என்றும் சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
விண்வெளியை உணர வைக்க வேண்டும் : விண்வெளியை பற்றியும் அதன்தன்மைகளை பற்றியும் மாணவர்களுடன் அமர்ந்து பேசினால் மட்டும் போதாது, மாணவர்களுக்கு விண்வெளியை உணர வைக்க வேண்டும் நாசாவுடன் இணைப்பில் உள்ள வணிக குழுவினர்கள் மக்களை குறைந்த பட்சம் பூமியின் குறைந்த சுற்றுவட்டப்பாதைக்காவது அழைத்து செல்ல வேண்டும்" இப்படியாக கல்பனா சாவ்லாவின் கனவை நாம் நிறைவேற்ற வேண்டும் என்று சுனிதா வில்லியம்ஸ் கேட்டுக்கொண்டார்
பிரபஞ்சத்தில் இருந்து வந்தவர் : கல்பனா சாவ்லாவின் தந்தை உரையாடிய போது "கல்பனா தன்னை ஒரு குறிப்பிட்ட நாட்டில் இருந்து வந்தவளாக எப்போதுமே கருதியது கிடையாது, தான் பிரபஞ்சத்தில் இருந்து வந்தவள் என்று நம்புபவள்" என்று கூறினார்.
பழுதான காலணி : ஒருமுறை, தன் பழுதான காலணிகளை சீர் செய்துவிட்டு தாமதமாக வீடு திரும்பிய கல்பனா சாவ்லாவிடம் அவர் கணவர் "நீ வேறு காலணி வாங்கலாமே..?" என்று கேட்டபோது "புதியது வாங்காமல், இதை நான் சீர் செய்வதால் ஒரு விலங்கின் உயிர் சேமிக்கப்படுகிறது மற்றும் ஒரு தொழிலாளிக்கு வேலைக்கூலி கிடைகிறது" என்று பதில் அளித்தார்.