சேவைக் கட்டணம் ரத்து : Credit and Debit Card மூலம் நடத்தும் பணபரிவர்த்தனைக்கான சேவைக்கட்டணம் இரத்து
கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும்போது இதுவரை வசூக்கப்பட்டு வந்த சேவைக்கட்டணம் முதலான கட்டணங்களை இரத்து செய்ய மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
ரொக்கப் பரிவர்த்தனைகளைக் குறைத்து வங்கி அட்டைகளைப் பயன்படுத்தும் நடைமுறை அதிகரிப்பதற்காக இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ரொக்கமாகப் பணம் செலுத்துவதற்குப் பதிலாக கிரெடிட், டெபிட் அட்டைகளைப் பயன்படுத்தும்போது, அதற்கென பிரத்யேகமாக சேவைக் கட்டணம், சிறப்பு வசதிக் கட்டணம், உபரிக் கட்டணம் ஆகியவை வசூலிக்கப்படுகின்றன.
இதன் காரணமாக ரொக்கப் பரிவர்த்தனைகளையே மக்கள் அதிக அளவில் மேற்கொள்கின்றனர். இதைத் தவிர்க்கும் பொருட்டு கிரெடிட், டெபிட் அட்டைகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணங்களை ரத்து செய்ய மத்திய அரசு முன்வந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் 24-02-2016 அன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், குறிப்பிட்ட சில பரிவர்த்தனைகளை வங்கி அட்டைகளின் மூலமாக மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்ற பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதைத் தவிர கிரெடிட், டெபிட் அட்டைகள் மூலமாக பொருள்களை வாங்கும்போது நுகர்வோருக்கு வழங்கப்படும் தள்ளுபடி விகிதத்தை மாற்றியமைப்பதற்கும் மத்திய அமைச்சரவை இசைவு தெரிவித்துள்ளது.
நன்றி : தினமணி தமிழ் நாளிதழ்