ஜனா என்கிற ஜனார்த்தனம்!
எட்டு வயது வரை வழக்கமான குறும்புக்கார சிறுவனாக இருந்தவன், ஒரு நாள் மாலை வேளையில், தன் வீட்டு மாடியில் விளையாடிக் கொண்டு இருந்த போது, மின் கம்பியில் சிக்கிக் கொண்ட பட்டத்தை, இரும்புக் கம்பியால் எடுக்க போன போது, படுபயங்கரமான மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளானவன்.
நீண்ட மருத்துவ பயணத்திற்கு பின், பாதி ஆளாக பிழைத்துக் கொண்டான்.
வலது கையில் தோள் வரையிலும், இடது கையில் முழங்கை வரையிலும், இடது காலில் முழங்கால் வரையிலும், வலது காலில் பாதம் வரையிலும் துண்டித்து எடுக்கப்பட்ட நிலையில் ஜனாவின் நிலை, பார்ப்பவர்கள் யாரையும் கண்ணீர் விட வைத்தது.
ஜனாவின் மருத்துவ செலவிற்காக தங்களது, "பிரின்டிங் பிரஸ்' உள்ளிட்ட தொழில் கூடங்களைக் கூட விற்ற தம்பதியர், கேசவன் - புவனேஸ்வரி, நம்பிக்கையை மட்டும் விட்டுவிடாமல் மகனை, தங்களது சிரமம் தாக்காது பார்த்து பாதுகாத்து வந்தனர்.
ஜனாவும் புன்னகை மாறாமல், தன் புது வாழ்க்கையை துவக்கினான். பழையபடி பள்ளிக்கு சென்றான், பாடங்களை படித்தான். சராசரி மாணவனாக வந்தாலே போதும் என்று எல்லாரும் எதிர்பார்த்தாலும், தான் சாதிக்கும் மாணவனாக வர வேண்டும் என்பதுதான் ஜனாவின் எண்ணமாக இருந்தது.
தன், கை கால்கள் முழுமையாக இல்லாவிட்டாலும், மூளையையும், வாயையும் வைத்து, ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணியவன், உதடுகளால் தூரிகை பிடித்து, ஒரு இரவு முழுவதும் கண் விழித்து, ஓவியம் வரைந்தான்.
விடிந்ததும் அந்த ஓவியத்தை பார்த்த பெற்றோருக்கு தாங்க முடியாத சந்தோஷம். காரணம், அந்த ஓவியம் அவ்வளவு அழகாகவும், தத்ரூபமாகவும் இருந்தது.
பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டினர்; மேலும் மேலும், ஓவியம் வரைய தூண்டினர்.
மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டி என்று இல்லாமல், பொதுவான ஓவியப் போட்டிகளில் கூட, ஜனாவின் ஓவியம் பங்கேற்று, பல பரிசுகளை பெற்று வந்தது.
இதன் காரணமாக, ஒன்றுக்கு இரண்டு முறை ஜனாதிபதியின் விருதை பெற்றான் ஜனா.
இப்படியே அவரது பயணம் தொடர்ந்தது.
தற்போது, 25 வயதான ஜனா கூறும் போது...
"ஓவியம் எனக்கு ஒரு உற்சாகத்தையும், உந்துதலையும் கொடுத்து இருந்தாலும், அதுவே என் வாழ்க்கையில்லை என்பதை உணர்ந்து கொண்டேன்.
"என் இடது முழங்கையின் முடிவில், பிசிறு போல நீட்டி இருக்கும் சதை துண்டை வைத்து, ஏதாவது செய்ய வேண்டுமே என நினைத்தேன். நினைத்தபடி அதில் கேரம் விளையாடினேன்; கீபோர்டு வாசித்தேன்; கடைசியில் கம்ப்யூட்டர் இயக்கினேன்.
"நான் ஒரு கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் டிசைனராக வேண்டும் என்ற லட்சியத்தோடு படித்தேன். லயோலா கல்லூரியில், "விஷூவல் கம்யூனிகேஷன்' படித்து முடித்தேன்.
"என் திறமையின் அடிப்படையிலான வேலையை தேடினேன். "புதிய தலைமுறை' தொலைக்காட்சி நிறுவனம், என் திறமையை அங்கீகரித்து, வேலை கொடுத்துள்ளது. இப்போது அங்கு நிகழ்ச்சி தயாரிப்பு பிரிவில் வேலை பார்க்கிறேன்...' என்கிறார்.
ஜனாவின் இப்போதைய கனவு, நண்பர்களுடன் இணைந்து, "அனிமேஷன்' படம் செய்ய வேண்டும் என்பதுதான்.
வீட்டு வாடகை உயர்வு காரணமாக, அடிக்கடி வீடு மாறுதல், தன் வேகத்திற்கு இணையான கம்ப்யூட்டர் வாங்க முடியாதது, தன் தந்தையை இரு சக்கர ஓட்டுனராகவும், உதவியாளராகவும் சிரமப்படுத்துகிறோமே என்பது போன்ற கவலைகள் மட்டும் இல்லாவிட்டால், இவரது லட்சியம், தொட்டு விடும் தூரம்தான்.
அவர் சொல்வது எல்லாம், "எதை வேண்டுமானாலும் இழக்கலாம்; ஆனால், நம்பிக்கையை மட்டும் இழக்கக் கூடாது...' என்பது தான்; மிகச் சரியான வார்த்தை.
ஜனாவின் தொலைபேசி எண்: 9382640666, 9092590975.