ஆதரவற்ற குழந்தைகளை கண்டால் ‘1098’ல் தெரிவியுங்கள்: சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
பொதுமக்கள் தங்கள் பகுதியில் அல்லது பொது இடங்களில் ஆதரவற்ற குழந்தைகளை கண்டால் ‘1098‘ என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் படி அனைத்து மாநிலங்களிலும் காணாமல் போன மற்றும் ஆதரவின்றி சுற்றித்திரியும் குழந்தைகளை கண்டுபிடிக்க ‘புன்னகையை தேடி’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டது.
கடந்தாண்டு ஜனவரி 1-ம் தேதி முதல், 31-ம் தேதி வரை தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் குழந்தைகள் நலனுடன் தொடர்புடைய துறைகள் மற்றும் காவல்துறையினரை உள்ளடக்கிய 5 குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த குழுக்கள் காணாமல் போன குழந்தைகளை தேடின. நாடு முழுவதும் 3 ஆயிரம் குழந்தைகள் பேருந்து நிலையம், கோயில்கள், சுற்றுலாத்தலங்கள், சாலையோரங்கள், ஆதரவற்றோர் இல்லங்களில் கண்டுபிடிக்கப்பட்டனர். பெரும்பாலானோர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். மற்றவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த ‘புன்னகையைத்தேடி’ திட்டம் வெற்றியடைந்ததை தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சகம் கடந்தாண்டு ஜூலை 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை மீண்டும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில் சென்னையில் மட்டும் 122 குழந்தைகள் கண்டறியப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து மீண்டும் புன்னகையைத்தேடியின் 2-வது திட்டம் இந்தாண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில் காவல்துறை, அரசு சாரா அலுவர்களை கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு, கோயில்கள், பேருந்து நிலையங்கள், சுற்றுலாத் தலங்கள், ரயில் நிலையங்கள்ல மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆதரவின்றி குழந்தைகள் இருப்பின் மீட்புப்பணி நடக்கிறது.
ஆதரவற்ற மற்றும் காணாமல் போன குழந்தைகளின் வாழ்வு சிறப்பாக அமைய, பொதுமக்கள் தாங்கள் பகுதி அல்லது பொது இடங்களிலோ ஆதரவற்ற குழந்தைகளை கண்டால் உடனடியாக ‘1098’ என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தகவல் அளிக்கலாம். அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கலாம்'' என்று கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.