உன்னைப் போன்றவர்கள்தான் தேவை.. கட்சி ஆரம்பிக்கப் போவதாக கூறிய இளைஞருக்கு சகாயம் பாராட்டு!
சென்னை: அரசியலில் நேர்மையை கொண்டு வரவேண்டும் என்று நினைப்பவர்கள் சமூகத்தில் இருந்து தொடங்கவேண்டும். தூய சமூகத்தை, நேர்மையான சமூகத்தை கொண்டு வருவதன் மூலம் அரசியலில் நேர்மையை கொண்டு வரமுடியும் என்று ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார். சகாயம் பேச்சைக் கேட்ட இளைஞர் ஒருவர், வருங்காலத்தில் விவசாயிகளின் துயரை துடைக்க "மாணவர்கள் விவசாயிகள் கட்சி" என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றினை தொடங்க உள்ளதாக கூறியுள்ளார்.
தமிழகம் மாற்றத்துக்கு தயாராகி வருகிறது. நிகழ்கால, கடந்த கால ஆட்சிகளால் ஏற்பட்ட அதிருப்திகளின் வெளிப்பாடுதான் ஐஏஎஸ் அதிகாரி 'சகாயம்' அரசியலில் ஈடுபட வேண்டும் என்பதை வலியுறுத்தி நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சென்னையில் பேரணி நடத்தினர். சகாயம் அரசியலில் ஈடுபட வேண்டும், சகாயம் முதல்வராக வேண்டும் என்ற குரல்கள் தமிழகத்தில் பரவலாக வலுக்கத் தொடங்கி இருக்கிறது. சகாயத்துக்கு எப்போதும் பொதுமக்கள் மத்தியில் நல்ல பெயர் இருக்கிறது. நேர்மையான அதிகாரி என்ற அடையாளத்தோடு இரவு பகல் பாராமல் கடமையே கண்ணாக செயல்படுபவர் என்பதால் அவர் மீது வைத்திருக்கும் மதிப்பும், மரியாதையும் கூடிக்கொண்டே செல்கிறது. தமிழ்நாட்டின் கெஜ்ரிவால் என்று சகாயத்தை சிலர் புகழ்பாடுகிறார்கள். இன்னொரு கக்கனாக சகாயம் அரசியலில் சாதிப்பார் என்று சொல்கிறார்கள். இளைஞர்களோ இவரை அரசியலுக்கு அழைப்பதில் மிகத் தீவிரமாக களத்திலும் இறங்கிவிட்டனர்.
இந்த நிலையில் ஒரு வீடியோ பேச்சை வெளியிட்டுள்ளார் சகாயம்.அதில் அவர், அரசியலில் நேர்மையை கொண்டு வரவேண்டும் என்று நினைப்பவர்கள் சமூகத்தில் இருந்து தொடங்கவேண்டும் தூய சமூகத்தை, நேர்மையான சமூகத்தை கொண்டு வருவதன் மூலம் அரசியலில் நேர்மையை கொண்டு வரமுடியும். உங்களின் ஆற்றல்கள் அனைத்தும் சமூகத்தை நோக்கி செல்லவேண்டும். உங்களின் ஆற்றலை சமூகப்பணிகளில் ஈடுபடுத்துங்கள் என்று கூறியுள்ளார். நாட்டின் பசுமைப்பரப்பை அதிகரிக்க வேண்டும் என்று கூறியுள்ள சகாயம், விவசாயிகளுக்குஆதரமான ஏரி குளங்களை பாதுகாக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். நதிகளை பாதுகாப்பதன் மூலம், இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதை தடுக்கமுடியும். ஏழை விவசாயிகளுக்கு படித்த நாம் உதவவேண்டும். நெசவாளர்களின் நிலை பரிதாபமாக இருக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கும், திருநங்கைகளுக்கும் உதவ முன்வரலாம் படித்த நாம் மக்களுக்கு உதவலாம் வழிகாட்டலாம் என்று தெரிவித்துள்ளார். ஆக்கப்பூர்வமான சட்டத்திற்குட்பட்ட சமூக பணிகளை செய்யவேண்டும். 2016 சட்டசபை தேர்தலை கண்ணியமான தேர்தலாக நடைபெற நேர்மையாக வாக்களிக்க லஞ்சம் பெறாமல் வாக்களிக்க விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். அன்பிற்குரிய இளைஞர்களே ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளுக்கு நான் துணையாக இருப்பேன் என்று கூறியுள்ளார் சகாயம் ஐ.ஏ.எஸ். மக்களுக்கான அதிகாரம் குடியரசு தினமான நேற்று மாலை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள செவனா ஹோட்டலில் நடந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் வயல் கூட்டத்தில் சகாயம் ஐ.ஏ.எஸ் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் பேசிய சகாயம், "உலகத்தில் இந்தியாதான் மிகப்பெரிய ஜனநாயக நாடு. மக்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரத்தைதான் குடியரசு தினமாகக் கொண்டாடுகிறோம். ஆனால், தற்போது மக்களுக்கு அதிகாரம் என்பது கேள்விக்குறியாகி இருக்கு. இந்த தேசத்தின் வளர்ச்சியை டெல்லியில் இருந்து பார்க்ககூடாது. இந்தியாவின் தொழில் நகரமான மும்பையில் இருந்து பார்க்ககூடாது. விவசாயிகள் தற்கொலை தேசத்தந்தை காந்தியடிகள் இந்தியாவின் வளர்ச்சி கிராமங்களில் உள்ளது என்றார். அதனால்தான் இன்றும் இந்தியா மட்டுமல்லாமல் அவரை உலக நாடுகள் தூக்கி பிடிக்கின்றன. என்னை பொருத்தவரை, ஒரு தேசத்தின் வளர்ச்சியை கிராமங்களில் இருந்துதான் கணக்கிடவேண்டும். கிராமங்களின் வளர்ச்சி விவசாயிகளிடம் உள்ளது. ஆனால், விவசாயிகளின் இன்றைய நிலைமை வறுமையிலும், வெறுமையிலும் உள்ளது. 1997 முதல் 2006ம் ஆண்டு வரை நம் நாட்டில் 1,66,304 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று ஓர் ஆய்வு முடிவு கூறுகிறது.
பரிதாப நிலையில் நெசவாளிகள் இதேபோல, நெசவாளிகளின் நிலையும் உள்ளது. இதிலிருந்து சுதந்திரத்தின் பலன் விவசாயிகளுக்கும், நெசவாளிகளுக்கும் போய்ச்சேரவில்லை என்பது தெரிகிறது. விவசாயிகள், நெசவாளிகள், தொழிலாளிகள் வாழ்க்கை எப்போது ஏற்றம் மிகுந்ததாக மாறுகிறதோ, அப்போதுதான், இந்த தேசம் முன்னேறியதாக பொருள் கொள்ளப்படும். விவசாயிகள் கவுரவப்படுத்தப்பட வேண்டும். படித்தவர்களும், வசதி வாய்ப்புள்ளவர்களான நாம், விவசாயிகள், நெசவாளிகள், தொழிலாளிகளுக்கு உதவுவதை கடமையாகக் கருத வேண்டும். நான் இந்தக் கடமைதான் செய்து வருகிறேன். நம்பிக்கை முக்கியம் மக்களின் நம்பிக்கையை ஏற்படுத்துவது பிரச்னை, அதைவிட அந்த நம்பிக்கையை தக்கவைக்க மிகப்பெரிய பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. இப்படி செயல்படுவதால் என்னை பைத்தியக்காரன், பிழைக்கத் தெரியாதவர்கள் என்று சொல்கிறார்கள். இந்த பைத்தியக்காரனை தலைமையேற்க வா என பல இளைஞர்கள் கூப்பிடுகிறார்கள். நான் வருகிறேனோ இல்லையோ, ஆனால் அவர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளேனே. அதுதான் முக்கியம். நான் அதிகம் நம்புவது குழந்தைகள், இளைஞர்களைத்தான். அவர்களால்தான் இந்த தேசத்தில் மாற்றத்தை கொண்டு வரப்போகிறார்கள்.
நேர்மையாக இருங்கள் இளைஞர்களே, தன்னல சிறகை சுருக்கிக்கொண்டு பொது நல சிறகை விரியுங்கள். என் நேர்மையை மக்கள் நம்புவதால் இன்னும் 5 சதவீதம் கூடுதலாக நேர்மையாக இருக்க வேண்டியுள்ளது. அப்படி எல்லா தலைவர்களும் அதிகாரிகளும் இருந்துவிட்டால் இந்த தேசம் எப்போதோ இன்னும் மாறியிருக்கும். எல்லோரும் எப்படி வேண்டுமானாலும் வாழலாம், நான் இப்படித்தான் நேர்மையோடு வாழுவேன். இப்படிப்பட்ட இளைஞர்கள்தான் உருவாக வேண்டும் என்று கூறினார் சகாயம். மாணவர்கள் விவசாய கட்சி சகாயம் பேச்சைக் கேட்ட இளைஞர் ஒருவர், நீங்கள் அரசியலுக்கு வரமாட்டேன் என விளக்கம் கொடுத்துவிட்டீர்கள். எனவே நான் வருங்காலத்தில் விவசாயிகளின் துயரை துடைக்க கட்சி தொடங்க உள்ளேன், கட்சியின் பெயர் "மாணவர்கள் விவசாயிகள் கட்சி" (Students Agriculture Party). இந்த தேசத்தில் கல்விக்கும், விவசாயத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். இவை இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்தால் நாடு முன்னேறிவிடும். அதுதான் எனது குறிக்கோள் என அந்த இளைஞர் கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த சகாயம், உன்னைப்போல் இளைஞர்கள்தான் இந்த தேசத்துக்கு தேவை! என பாராட்டினார்.