60 பயணிகளின் உயிரை காப்பாற்றிய ஓட்டுனர் மாரடைப்பால் மரணம்
அரசு பேருந்தை ஓட்டி செல்லும் போது தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அறிந்து, பாதுகாப்பாக பஸை நிறுத்தி பயணிகளை உயிரை காப்பாற்றிய ஓட்டுனர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
கும்மிடிப்பூண்டி, கவரைப்பேட்டை அருகே உள்ள கீழ்முதலம்பேடு கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் அரசு பேருந்து ஓட்டுனராக உள்ளார். அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு திருப்பதியிலிருந்து சென்னை கோயம்பேட்டிற்கு தமிழக அரசு பஸ்சை ஓட்டி வந்தார். அப்போது, தடா அருகே அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அறிந்த அவர், தனது கட்டுபாட்டை மீறி சென்று கொண்டு இருந்த பேருந்தை உடனடியாக சாலையோரம் நிறுத்திவிட்டு, தனது இருக்கையிலேயே மயங்கி கீழே விழுந்தார். இந்நிலையில், அந்த பேருந்தில் பயணம் செய்த 60 பயணிகள் உயிர் தப்பினர்.
இதைப்பார்த்த பேருந்து பயணிகள் சில நிமிடங்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனை தொடர்ந்து, பேருந்தில் இருந்த பயணிகள் ஓட்டுனரை உடனடியாக தடாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவர் மருத்துவமனையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இவரது உடலை பார்த்த உறவினர்கள் கதறி அழுத காட்சி அனைவரது கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது. தனது உயிரையும் பொருட்படுத்தாமல் பயணிகளின் உயிரை காப்பாற்றிய அந்த ஓட்டுனருக்கு சக தொழிலாளர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.