என் வாழ்வில் திருக்குறள் டாக்டர் கலாம்
குறள்:
உரம்ஒருவற்கு உள்ள வெறுக்கை அஃதுஇல்லார்
மரம்மக்கள் ஆதலே வேறு (600)
பொருள்:
ஒரு செயலை ஊக்கத்தோடு செய்யும்போதுதான் நன்மையும் உயர்வும் ஏற்படும். ஒரு மனிதனுக்கு ஊக்கமுடைமையே வலிமை சேர்ப்பதாகும். ஊக்கம் இல்லாதவர் மரத்துக்கும் ஒப்பாக மாட்டார்கள்.
விளக்கம்:
1979-ம் ஆண்டில் நாங்கள் எஸ்.எல்.வி ராக்கெட்டை விண்ணில் செலுத்தினோம். சில கோளாறுகள் காரணமாக திட்டம் வெற்றி அடையவில்லை. 18.07.1980 காலை 8.30-க்கு மீண்டும் எஸ்.எல்.வி-3 ராக்கெட் ஏவப்பட இருந்தது. ராக்கெட்டின் திட்ட இயக்குநரான என் அறையில் அதிகாலை 4.30 க்கு நடந்த சம்பவம் இன்றும் என் மனக்கண் முன் நிற்கிறது. தார்சேம் சிங், ரோகிணி செயற்கைக்கோளின் திட்ட இயக்குநர். அவர் குரு கிராந்த் புனித நூலை படித்துக் கொண்டிருந்தார்.
ராக்கெட்டின் இயக்குநர் டாக்டர் சீனிவாசன் பகவத் கீதையிலிருந்து சுலோகங்களை உச்சரித்துக் கொண்டிருந்தார். நான் நமாஸ் செய்து கொண்டிருந்தேன். பல்வேறு மதங்களை சேர்ந்தவர்களின் ஒரே பிரார்த்தனை திட்டம் வெற்றி அடைய வேண்டும் என்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்தன.
அறிவியல் சூழ்நிலையிலும் இந்த ஆன்மிக காட்சி இந்தியாவின் நாகரிக பராம்பரியத்தை எடுத்துக் காட்டியது. அன்று, ரோகிணி செயற்கைக் கோளை வெற்றிகரமாக வானில் ஏவி, பூமியை சுற்றச் செய்தோம். எஸ்.எல்.வி.,-3 திட்டம் இவ்வாறு சோதனைகளை தாண்டி அனைவருடைய ஒத்துழைப்பினாலும் பூரண வெற்றியடைந்தது. நம் உள்ளத்தில் லட்சியம் இருந்தால் உறுதி இருந்தால் நமது குறிக்கோளில் நிச்சயமாக வெற்றியடையலாம் என்பதற்கு இந்த நிகழ்ச்சி எடுத்துக் காட்டு!
குறள்
இடுக்கண் வருங்கால் நகுக; அதனை
அடுத்துஊர்வது அஃதொப்ப தில் (621)
பொருள்:
எப்படி எதனால் துன்பம் ஏற்பட்டது என்பதை ஆராய்ந்து, அதற்கான காரணத்தைக் கண்டறிந்து, அத்துன்பத்தில் இருந்து விடுபடுவதற்கு இயல்பாக இருப்பதே துணை செய்யும். அறிவுடையவர்கள் எத்தனை துன்பங்கள் நேரிட்ட போதிலும் தங்கள் மன உறுதியினால் அவற்றை வென்றுவிடுவார்கள்.
விளக்கம்:
செயற்கைக்கோள் (SLV-3) செலுத்தும் பணியில் நானும் என் நண்பர்களும் ஈடுபட்டிருந்தோம். விண்ணில் பறக்க எல்லா நிலைகளையும் உறுதிபடுத்திய நிலையில், ராக்கெட் விண்ணில் சீறி பாய்ந்து முதல்கட்ட நிலையை வெற்றிகரமாக கடந்தது. தன்னுடைய இரண்டாவது நிலையை நோக்கி செல்லும்போது ராக்கெட் தன்னுடைய பாதையில் இருந்து மாறி செல்ல ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் அதன் செயல்பாட்டை இழந்து திட்டம் தோல்வியில் முடிந்தது. அந்த நேரத்தில் தோல்வியின் விமர்சனங்கள், என்னை வேதனையின் உச்சத்துக்கே கொண்டு சென்றன.
செய்தித்தாள்கள் கடுமையாக விமர்சனம் செய்தன. உடனே தோல்விக்கான காரணத்தை ஆராய தொடங்கினோம். மேலும் எங்கள் திட்டத்தை வேகமாக செயல் படுத்தவும், எங்களுக்குள் ஒரு எழுச்சி. இந்த தருணத்தில் தோல்விகளை எப்படி எதிர் கொள்வது என்பதையும், தோல்வியை எவ்வாறு தோல்வியுறச் செய்து வெற்றியடைய வேண்டும் என்பதையும் கற்றுக் கொண்டேன்.