பார்வை இல்லாத பலே மெக்கானிக்!
இப்போதெல்லாம் டூவீலர் விற்பனை செய்யும் நிறுவனங்களே, வண்டிக்கு இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கான, 'கியாரன்டி சர்வீஸ்' கொடுக்கின்றனர். இந்த குறிப்பிட்ட காலம் முடிந்த பின், சர்வீஸ் சென்டருக்கு கொண்டு செல்வது தான் வழக்கம்.
ஆனால், 'கியாரன்டி பீரியடு' இருந்தாலும், மெக்கானிக் கண்ணப்பனிடம் ஒரு முறை சர்வீஸ் செய்து வாங்கிவிட்டால், பின் எந்த பிரச்னையும் இருக்காது என்று நம்புகின்றனர், திருச்சியில் உள்ள டூ வீலர் உரிமையாளர்கள்.
ஆனால், கண்ணப்பன் என்ற அந்த இளைஞருக்கோ பார்வை கிடையாது. எளிய குடும்பத்தில் பிறந்த இவர், நான்கு வயதில் பெயர் தெரியாத கண் நோய்க்கு தன் இரு கண் பார்வையையும் பறிகொடுத்தார். தந்தையை இழந்த பின், தாயின் பாதுகாப்பில் வளர்ந்தவருக்கு, பள்ளி செல்ல முடியாத நிலையில், வீட்டிற்கு அருகில் இருந்த டூ வீலர் மெக்கானிக் கடையே உலகமானது. இதன் காரணமாக, வாகனங்களின் சத்தத்தை வைத்து, வண்டியின் பிரச்னையை அறியவும், சரி செய்யவும் பழகினார்.
பல ஆண்டு கால பயிற்சிக்கு பின், சொந்தமாக சிறிய அளவில் டூ வீலர் ஒர்க் ஷாப் வைத்தார்.
அவசரத்திற்கு இவரிடம் வாகனத்தை கொடுத்தவர்கள், பின், இவரை தேடி வந்து வாகனத்தை கொடுத்தனர். அவ்வளவு
தொழில் சுத்தம்.
பிரச்னையை கேட்டு, வண்டியை, 'ஸ்டார்ட்' செய்தும், ஸ்டாண்டு போட்டும் ஓட விடுவார். அப்போது வரும் சத்தத்தை வைத்து, பிரச்னையை கண்டுபிடித்து, சரி செய்வார். இவருடைய தொழில் சுத்தத்தினால், வாடிக்கையாளர்கள் அதிகரிக்க, தற்போது, 'ஹைடெக்' லிப்ட் வசதியோடு திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரிக்கு பின், ராமலிங்கா நகர் தெற்கு விரிவாக்க பகுதியில், ரிவைவல் காலனியில்,
இவரது எஸ்.என்., மோட்டார் சைக்கிள்ஸ் மெக்கானிக் ஷாப் செயல்படுகிறது.
இழந்ததை நினைத்து கவலைப்படாமல், இருப்பதை வைத்து எவ்வாறு சிறப்புடன் வாழ வேண்டும் என்பதற்கு கண்ணப்பனே உதாரணம்.
'கண்ணின் சக்தியை, என் காதுகளுக்கு கொடுத்துள்ளான் இறைவன். இது போதும் நான் பிழைத்துக் கொள்ள...' என்று சந்தோஷமாக சொல்கிறார்.
'பார்வையற்றவர் என்ற முறையில் உங்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவன உதவிகள் கிடைக்குமே... ஏதாவது முயற்சி செய்தீர்களா?' என்று கேட்டால், 'இல்லாதவர்களும், தங்களால் இயலாதவர்களும் செய்ய வேண்டிய வேலை அது! எனக்கு அதெல்லாம் தேவையில்ல...' என்கிறார்.
லியோ, ரமேஷ் மற்றும் கோபி என்ற இளைஞர்களை கூட்டாளியாக்கி, வெற்றிகரமாக செயல்படும் கண்ணப்பனை, 99764 37717 என்ற மொபைல் எண்ணில் வாழ்த்தலாம்.
நன்றி தினமலர்