பவுடர், சீப்பு, கண்ணாடியுடன் மாணவர்களை வரவேற்கும் அரசுப் பள்ளி: தனியார் பள்ளியை புறந்தள்ளிய கிராம மக்கள்
உசிலம்பட்டி அருகே ஒரு ஊரில் அவசரமாக பள்ளிக்கு வரும் மாணவர்கள் பயன்படுத்து வதற்காக வகுப்பறையிலேயே பவுடர், சீப்பு, கண்ணாடி, பற்பசை போன்ற பொருட்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. காலை யில் வந்தவுடன், தங்களை தயார்படுத்திய பின்பே மாணவர்கள் வகுப்பறைக்குச் செல்கின்றனர்.
மதுரை மாவட்டம், உசிலம் பட்டி அருகே உள்ளது அய்யன்கோவில்பட்டி. இந்த ஊர் மக்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளை உள்ளூரில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் மட்டுமே படிக்க வைக்கின்றனர். வசதியான வீட்டுக் குழந்தைகள்கூட பக்கத்து ஊர் பள்ளிக்கோ, தனியார் பள்ளிக்கோ செல்வதில்லை.
இந்தப் பள்ளியில் அப்படி யென்ன சிறப்பு என்று பார்த்தால் முதல் ஆச்சரியம், அனைத்து மாணவர்களுமே டை, அடையாள அட்டைகளை அணிந்துகொண்டு பளிச்சென காணப்பட்டதுதான். வகுப்பறையின் மேற்கூரையை ஓவியம், தானியங்கள் சேகரிப்பு என மாணவர்களின் படைப்புகள் அலங்கரிக்கின்றன.
வகுப்பறையில் உள்ள அலமாரி யில் மருந்து, மாத்திரை போன்ற முதலுதவிப் பொருட்களுடன், எண்ணெய், சீப்பு, பவுடர், கண்ணாடி, பற்பசை போன்ற பொருட்களும் இருந்தன.
மதிய உணவு இடைவேளைக் கான மணி ஒலித்ததும், மாணவர் கள் சத்துணவு பெற அமைதி யாகச் செல்கிறார்கள். தட்டு மற்றும் டம்ளர்கள்கூட பள்ளி யிலேயே வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அடை யாளத்துக்காக எண்கள் எழுதப்பட்ட அந்த தட்டுகளை எடுத்து சுத்தமாக கழுவிவிட்டு, வரிசையில் அமர்ந்து சாப்பிடுகின்றனர். அரசுப் பள்ளியா என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது இந்தப் பள்ளி.
இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரகலா கூறியதாவது: “இப்பள்ளி தொடங்கப்பட்டு 9 ஆண்டுகள்தான் ஆகின்றன. ஆரம்பத்தில் பள்ளிக்கு சொந்தக் கட்டிடம்கூட கிடையாது. கிராமப் பொது மேடையில்தான் வகுப்பு நடத்தினோம். ஒரு வகுப்பறைகூட இல்லாதது வருத்தம் அளித்தது. இதனால் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வருவதிலும் சிக்கல் ஏற்பட்டது.
அதன்பின் இந்த ஊரைச் சேர்ந்த ஒரு தன்னார்வலர் வழங்கிய இடத்தில் பள்ளிக்கூடம் கட்டப்பட்டது. பின்னர் நாட்கள் செல்ல, செல்ல கிராம மக்களின் முழுமையான ஒத்துழைப்பால், தற்போது 67 மாணவ, மாணவியர் இங்கு படித்து வருகின்றனர். 3 ஆசிரியர்கள் உள்ளனர்.
பள்ளிக்குத் தேவையான பல உபகரணங்களை தன்னார் வலர்களே வாங்கிக் கொடுத் துள்ளனர். பள்ளியில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் கிராம மக்கள் தவறாமல் கலந்து கொண்டு மாணவர்களை உற் சாகப்படுத்துகின்றனர்.
ஆசிரியர்கள் கிராமத்தினரோடு சுமுகமாகப் பழகி, அரசுப் பள்ளியின் சிறப்புகளை எடுத்துக் கூறியதால் இந்த கிராமத்திலுள்ள அனைத்து மாணவர்களும் இங்குதான் படிக்கின்றனர். 5-ம் வகுப்புக்கு மேல்தான் பக்கத்து ஊர்களில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு செல்கின்றனர்.
பெற்றோருக்கு உதவியாக சில மாணவர்கள் அதிகாலையிலேயே எழுந்து காடு, கழனிக்குச் சென்று விடுகின்றனர். அதன் பின்னர், அவசர அவசரமாக பள்ளிக்கு வரும் பல மாணவர்கள் தலைகூட சீவாமல் வருகின்றனர். அவர்கள், தங்களை தயார்படுத்திக் கொள்வதற்காக எண்ணெய், பவுடர் போன்ற பொருட்களை பள்ளியிலேயே வைத்திருக்கிறோம். அவர்களுக்கு மூத்த மாணவர்களும் உதவி செய்கின்றனர்.
இப்பள்ளி ஒன்றிய அளவில் சிறப்பான பள்ளியாகத் தேர்வு பெற்று மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள் ளோம். பள்ளியில் கணினி இல்லாததால் அதில் வெற்றிபெற முடியவில்லை. கொடையாளர்கள் மூலம் பள்ளிக்கு கணினியைப் பெற முயற்சி மேற்கொண்டுள்ளோம்” என்றார்.